ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தடையை நீக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா வழக்கு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தடையை நீக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா வழக்கு
Updated on
1 min read

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தடையை நீக்க கோரி வேதாந்தா குழுமம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் திரண்டு தொடர் போராட்டம் நடத்தினர். 100 நாட்கள் நடந்த போராட்டத்தில் நூறாவது நாளில் கடந்த ஆண்டு மே.22-ம் தேதி ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க நடந்த பேரணியில் வன்முறை ஏற்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி மே மாதம் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த தீர்ப்பாயம் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையில் நேரடி ஆய்வு செய்தது.

ஆய்வு செய்த அதிகாரிகள் அதன் அறிக்கையை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர்.  அந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி பிறப்பித்து தீர்ப்பளித்தது.

தீர்ப்பில், ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளதாகவும், ஆலை நிர்வாகத்தால் வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றும், 15 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது என்றும், மீண்டும் திறக்க உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு கிடையாது என்றும் கூறி தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

பின்னர், தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடலாம் என அறிவுறுத்தினர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

வேதாந்தா நிறுவன சட்டப்பிரிவு பொது மேலாளர் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியர், மின்சார வாரியம் ஆகியோர் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான மனுவை பிப்ரவரி 22-ம் தேதி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ளது.

இந்த வாரத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்க வாய்ப்புள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in