

சிபிஐ நடவடிக்கைக்கு எதிராக நடத்திவரும் மம்தா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் அவரது போராட்டத்துக்கு திமுக என்றும் துணை நிற்கும் என வாழ்த்து தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ரோஸ்வேலி மற்றும் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. அந்த வழக்குகளில் முன்பு விசாரணை அதிகாரியாக இருந்தவரும் தற்போதைய கொல்கத்தா காவல் ஆணையருமான ராஜீவ்குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர் ஆஜராகாததால், சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் நுழைய முயன்றனர்.
ஏற்கெனவே மேற்கு வங்க அரசு மேற்குவங்கத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமானால் மாநில அரசின் அனுமதி பெறவேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிபிஐ அதிகாரிகளை மேற்குவங்க போலீஸார் சிறைபிடித்தனர். பின்னர் அவர்களை விடுவித்தனர்.
சிபிஐ அதிகாரிகளின் செயலை கண்டித்த முதல்வர் மம்தா பானர்ஜி ஜனநாயகம் காப்போம் எனக் கூறி நேற்றிரவு முதல் கொல்கொத்தாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். சிபிஐ அதிகாரிகள் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் காவல் ஆணையர் வீட்டிற்கு வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
சிபிஐ மூலம் தங்களை மிரட்ட முடியாது என்று குறிப்பிட்ட மம்தா, கூட்டாட்சி தத்துவத்தைப் பாதுகாக்க போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று மம்தா போராட்டத்தை ஆதரித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று ஸ்டாலின், மதுரை திருப்பரங்குன்றம் - தணக்கன்குளம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்துக்கொண்டார். பின்னர் அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, நேற்றிரவு முதல் அவர் நடத்திவரும் போராட்டம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார். மாநில சுயாட்சிக்கு ஆதரவான போராட்டங்களுக்கு திமுக என்றும் ஆதரவாக இருக்கும் என்றும் உறுதியளித்தார்.
அவருக்கு மம்தா பானர்ஜி தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.