Published : 24 Feb 2019 02:51 PM
Last Updated : 24 Feb 2019 02:51 PM

ஜக்கி வாசுதேவ்: சர்ச்சைகள், சாதனைகள், சவால்கள்...!

உலகம் முழுவதும் உள்ள ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்தவர்களால் சத்குரு என்றழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், 60 வயதைக் கடந்தவர் என்றால் நம்ப முடியாது. உடையிலும், நடையிலும், பைக் ரைடிலும் ‘நான் என்றும் 16’ தான்  என கெத்து காட்டுகிறார் இவர்.  டீன் ஏஜ் இளைஞர்களும் திக்குமுக்காடிப்  போகும் அளவுக்கு வேகமாய் பைக் ஓட்டும் இவர்,  மாட்டு வண்டி, ரேஸ் கார், ஹெலிகாப்டர் என எதையும்  விட்டு வைக்கவில்லை.

எத்தனையோ எதிர்ப்புகள் கிளம்பினாலும்,  அவற்றை  தகர்த்தெறிந்து, உலகம் முழுக்க கிளை பரப்பி, மிகப் பிரம்மாண்டமாய் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது ஈஷா யோகா மையம். இதற்கு முழுமுதற் காரணம்  ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ்.

சமூக ஊடகங்களில் எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கச்சைகட்டிக் கொண்டிருந்தாலும், அவர் எப்போதும் `மிஸ்டர் கூல்’தான். அனல் பறக்கும் கேள்விகளைத் தொடுத்தாலும், கொஞ்சமும் பதற்றமடையாமல் பதில் சொல்கிறார் அவர்.ஜெகதீஷ் வாசுதேவாக இருந்தவர் எப்படி ‘சத்குரு’வாக மாறினார்?  தமிழ் தெரியாமலேயே கர்நாடகத்தில் இருந்து கோவை வந்து, தமிழகத்தில் இவ்வளவு பெரிய ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தை எப்படி நிறுவினார்?

கர்நாடக மாநிலம் மைசூரில் 1957 செப்டம்பர் 3-ம் தேதி வாசுதேவ்- சுசீலா தம்பதிக்கு பிறந்த கடைக்குட்டி மகன் ஜகதீஷ் வாசுதேவ். செல்லமாக ’ஜக்கி’. சாகச உணர்வு மிக்க அவருக்கு வழக்கமான பள்ளிக் கல்வி முறையில்  நாட்டமில்லை. வகுப்பறை சுவர்களில் அடங்கியிருக்க மாட்டார். பள்ளியில் உயரமான மரத்தின் உச்சிக் கிளைக்கு டிபன் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் சகிதமாக ஏறும் ஜகதீஷ், மாலை வரை மேலேயே அமர்ந்திருப்பாராம்.

கையில் கொஞ்சம் பணம் கிடைத்தால், சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கிக்கொண்டு காட்டுக்குள் ஓடி விடுவார். நதிகளில் உற்சாக நீச்சல், பாம்புகளைப் பிடித்து விளையாடுவது, மரம் ஏறி தேன் எடுப்பது என பள்ளிப் பருவத்தை துள்ளலுடன் கழித்துள்ளார்.

சாகச விரும்பி

13 வயதில்  தாத்தாவின் தோட்டத்தில் உள்ள பெரிய கிணற்றில், நண்பர்களுடன்  குதித்து விளையாடுவார். ஒரே நேரத்தில் குதித்து, யார் முதலில் கிணற்றிலிருந்து மேலே ஏறி வருகிறார்களோ அவருக்கே வெற்றி. பெரிய ரிஸக் எடுக்கும் போட்டி. ஆனால், ரத்தத்தில் சாகச உணர்வு ஊறிப்போன ஜகதீஷ், இந்த விளையாட்டில் வெற்றி வாகை சூடி வந்தார்.

யோகா கற்றுத்தந்த  முதியவர்

ஒருநாள், கிணற்றில் குதித்து விளையாடிக் கொண்டிருக்கும்போது, 80 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவரும் கிணற்றில் குதித்துள்ளார். அவர் பெயர் மல்லாடிஹள்ளி ராகவேந்திரா சுவாமிகள். ‘அவ்வளவுதான், கிழவன் கதை முடிஞ்சாச்சு’ என்று ஜகதீஷும், நண்பர்களும் எண்ணியுள்ளனர். ஆனால், அந்த முதியவர் மிக வேகமாக கிணற்றிலிருந்து மேலே ஏறி வந்துள்ளார். அவரது உடல் வலிமையின் ரகசியத்தை கேட்ட ஜகதீஷிடம், தன்னிடம் யோகா கற்றுக்கொள்ளுமாறு ராகவேந்திரா கூறியுள்ளார். இதை மறுக்காமல் சென்ற ஜகதீஷுக்கு, ஹடயோகா பயிற்சி கற்றுக்கொடுத்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ரைடிங்

அதேசமயம், பைக் ரைடிங் மீது அதிக ஆர்வம். அந்த காலக்கட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றிருந்த ‘ஜாவா’ பைக் ஒன்றை வாங்கி, இந்தியா முழுவதும் தனியாக சுற்றித் திரிந்தார். போகும் வழியில் பசியெடுத்தால், கிராமங்களில் முன்பின் தெரியாதவர்களின் வீட்டுக்குச் சென்று,  சாப்பிடுவதற்கு உணவு கேட்பார். அவர்கள் கொடுப்பதை உண்டுவிட்டு, அடுத்த இடம் நோக்கி பயணிப்பார். யாராவது தங்குவதற்கு இடமளித்தால் அங்கு தங்குவார். இல்லையென்றால் ‘பைக்’கிலேயே தூங்கிவிடுவார். சில நேரங்களில் 2, 3 நாட்கள்கூட தூக்கமே இல்லாமல் தொடர்ந்து பைக் ஓட்டியுள்ளார். “இந்த பைக் ரைடிங்தான் ஒட்டுமொத்த இந்தியாவையும், இங்கு வாழும் பல தரப்பட்ட மக்களையும் முழுமையாக புரிந்துகொள்ள உதவியது” என்கிறார் ஜகதீஷ்.

கல்லூரிப் படிப்பை முடித்ததும், சொந்தமாக தொழில் செய்ய முடிவெடுத்தார். வழக்கம்போல குடும்பத்தில் கடும் எதிர்ப்பு. அதை மீறி, கோழிப்பண்ணை, கட்டுமானப்  பணிகள் என பல தொழில்களில் இறங்கியதுடன், விவசாயத்திலும் ஈடுபட்டுள்ளார்.

திருப்பம் ஏற்படுத்திய சாமுண்டி மலை

மைசூர்  சாமுண்டி மலை ஜகதீஷுக்கு மிகவும் பிடித்த  ஒன்று. ஒரு நாள் பிற்பகலில் மலையின் உச்சிக்கு சென்று, வழக்கமாக அமரும் பெரிய பாறை மீது அமர்ந்திருந்தார். எதிரில் மைசூர் நகரமே ரம்மியமாக காட்சியளித்தது. “அப்போது கண்கள் திறந்திருந்தாலும், பேரானந்தத்தில் மூழ்கினேன். எதையெல்லாம் என்னுடையது என்று எண்ணி இருந்தேனோ, அவை காணாமல் போயின. ஒவ்வொரு கல்லும், புல்லும், வீசும் காற்றும், ஏன்  பிரபஞ்சம் முழுவதுமே நானே இருப்பதாக உணர்ந்தேன். என்னையறியாமல் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது. என் வாழ்க்கை முழுவதும் ‘நான்’ என்பது என் உடம்புதான் என்று கருதிக் கொண்டிருந்தேன். திடீரென எது நான், எது நானில்லை என்று வேறுபடுத்திப் பார்க்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டது. எல்லாமே நானாக மாறியிருந்தது. திரும்பவும் சுயநினைவுக்கு வந்தபோது மாலை ஏழரை மணியாகியிருந்தது. வெளியில்  இருள் நிறைந்திருந்தது. ஆனால், நான் முழு விழிப்புணர்வோடு இருந்தேன். அது வரையில் ‘நான்’ என்று கருதியிருந்த ஒன்று, முற்றிலு மாக காணாமல் போயிருந்தது” என்கிறார் ஜகதீஷ்.

தான் உணர்ந்த பேரானந்த நிலை குறித்து தன் நண்பர்கள் சிலருடன் பகிர்ந்து கொண்டார் ஜகதீஷ். ஆனால், அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாக  கிண்டல் செய்துள்ளனர். “இதனால் யாரிடமும் பேசாமல் தனிமையில் ஆழ்ந்தேன். முன் ஜென்ம நினைவுகள் நினைவுக்கு வந்தன. என் குருவின் விருப்பத்தை நிறைவேற்ற ‘தியானலிங்கம்’ ஒன்றை உருவாக்குவதே பிறவியின் நோக்கம் என்பதை உணர்ந்தேன். கடந்த இரு பிறவிகளில் நிறைவேறாத இந்த நோக்கத்தை, இந்தப் பிறவியில் கட்டாயம் செய்து முடிப்பதென சபதமேற்றேன்” என்கிறார் அவர்.

இதறகிடையே, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் யோகா வகுப்புகளை கற்றுக்கொடுக்கத் தொடங்கியிருந்தார். வெறும் 7 பேருடன் அவரது முதல் யோகா வகுப்பு  தொடங்கியது.

“நான் சொல்வது எதையும் நீங்கள் நம்ப வேண்டாம். யோகா என்பது ஒரு தொழில்நுட்பம். அது ஒரு கருவி. அந்த கருவியை சற்று பரிசோதித்துப் பாருங்கள். வேலை செய்தால் வைத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், தூக்கிபோட்டுவிட்டு உங்கள் வேலையைப் பாருங்கள்” என்பார் ஜக்கி வாசுதேவ். யோகா கற்க வருவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. எந்த விளம்பரமும் இல்லாமல், வாய்வழிச் செய்தியாகவே கூட்டம் குவியத் தொடங்கியது.

தியானலிங்க பிரதிஷ்டை

யோகா கற்றுக்கொடுப்பது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தியானலிங்கம் அமைப்பதற்கான இடத்தையும் தேடிக் கொண்டிருந்தார். நாடு முழுவதும் பல இடங்களில் தேடிய பின்னர், கோவை வெள்ளியங்கிரி மலைப் பகுதிக்கு வந்துள்ளார். வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் கால்வைத்த சில நாட்களில், மலையை ஒட்டியிருந்த பட்டா நிலம்,  அவரது கைக்கு வந்து சேர்ந்தது. இப்படித்தான் உருவானது ஈஷா யோகா மையம். பல தடைகளைத் தாண்டி 1999 ஜூன் 24-ல் பிராணப் பிரதிஷ்டை மூலம் தியானலிங்கத்தை  உலகுக்கு அர்ப்பணித்தார் ஜக்கி வாசுதேவ்.

ஆனந்த அலை!

2000-க்குப் பிறகு தமிழகம் முழுவவதும், சத்குரு என்றழைக்கப்பட்ட ஜக்கி வாசுதேவின் யோகா வகுப்புகள் பிரபலமடையத் தொடங்கின.  ஊர் ஊராக அவரே நேரடியாகச் சென்று, யோகா வகுப்புகளை நடத்தினார். `அத்தனைக்கும் ஆசைப்படு’ என்ற அவர், `ஆசையைத் துறக்க வேண்டுமென நினைப்பதே ஒரு ஆசை தானே’ என அதற்கு விளக்கமும் அளித்தார்.

அவரது பக்தர்கள் கூறும்போது,  “பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த கற்பிதங்களை, தன் தர்க்க ரீதியான பேச்சால் தகர்த்தெறிந்தார். ஒவ்வொரு விஷயத்தையும் அறிவியல்பூர்வமாக விளக்கினார். மேற்கத்திய அடிமைத்தனத்தை கடுமையாக சாடினார். பாரத கலாச்சாரத்தின் மேன்மையை மக்களுக்கு உணர்த்தினார். நகைச்சுவை உணர்வுடன் கூடிய அவரின் அறிவார்ந்த பேச்சுக்கள் ஆயிரக்கணக்கான மக்களை கவர்ந்தன. அவர்களது வாழ்வில் ஒரு உள்நிலை மாற்றம் உருவாக காரணமாக இருந்தது. மக்கள் அலைஅலையாக ஈஷாவை நோக்கி ஈர்க்கப்பட்டனர். மதம், ஜாதியை  சொல்லிக்கொண்டு வந்தால்,  நான் யோகா கற்றுக்கொடுக்கமாட்டேன். வெறும் மனிதனாக வந்தால் மட்டுமே யோகா கற்றுத்தருவேன் என்று உறுதியாய் கூறினார் எங்கள் சத்குரு” என்கின்றனர்.

காலங்காலமாக விதைக்கப்பட்டிருந்த சாதிய உணர்வைப் போக்கி, மக்களை ஒன்றுசேர்க்க மாற்று வழியை யோசித்தார். யோகா வகுப்பு தீட்சை அளிக்கும் முன் அனைவரையும் கூட்டி,  ஒரு பந்தை கையில் கொடுத்து விளையாடச்  சொன்னார். அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. ஈஷாவைப் பொறுத்தவரை, சாதி, மத பாகுபாடுகள் என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் இதை வடிவமைத்துள்ளார் என்கின்றனர் யோகா மையத்தினர்.

“பல்வேறு நாடுகளுக்குச் சென்று யோகா சொல்லிக் கொடுத்தாலும்,  தமிழ் மக்கள் மீது மட்டும் அவருக்கு அலாதியான அன்பு உண்டு.  தமிழ் கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது,  தடையை நீக்கக் கோரி தேசிய ஊடகங்களில் தொடர்ந்து குரல் எழுப்பினார். `தமிழ் என்பது வெறும் மொழி அல்ல. அது ஒரு கலாச்சாரம்.  தமிழ் மொழி சம்ஸ்கிருதத்தை காட்டிலும் நீண்ட வரலாறு உடையது. வேறெந்த மொழியைக்  காட்டிலும் அதிகப்படியான இலக்கிய வளம்மிக்கது. எனவே, தமிழர்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது’ என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் பெரிய ஆன்மிகப் புரட்சியையே நடத்தியுள்ளார்” என்கிறார்கள் அவரது பக்தர்கள்.

பத்ம விபூஷன் விருது

ஜக்கி வாசுதேவின் ஆன்மிகச் சேவையை அங்கீகரிக்கும் வகையில், 2017-ல் மத்திய அரசு நாட்டின் உயர்ந்த விருதான `பத்ம விபூஷண்` வழங்கி கவுரவித்துள்ளது. “இது 4000 முழுநேரத்  தொண்டர்கள், 70 லட்சம் பகுதி நேர தன்னார்வத் தொண்டர்களின் செயல்களுக்கு கிடைத்த அங்கீகாரம்” என்றே ஜக்கி வாசுதேவ்தெரிவித்தார்.

 சமூக நலத் திட்டங்கள்

ஆன்மிகத்தைத் தாண்டி அவர் முன்னெடுத்த சமூக நலத் திட்டங்களின் பட்டியல் அதிகம். கல்வி, மருத்துவம், சுகாதாரம், விவசாயம், விளையாட்டு, கலாச்சாரம் பல விஷயங்களை கையில் எடுத்துள்ளது ஈஷா அறக்கட்டளை.

கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு, தரமான ஆங்கிலக் கல்வி அளிப்பதற்காக தமிழகத்தில் 8 ஈஷா வித்யா பள்ளிகளும், ஆந்திராவில் ஒன்றும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில்  8,132 மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களில் 61 சதவீதம் பேருக்கு கல்வி முழுமையாக இலவசம். இதேபோல, கோவை, சேலத்தில் 3 கிராமப்புற மருத்துவமனைகளால் 135

கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுகின்றனர். மலைவாழ் மக்கள் மற்றும் தொலைதூர மக்களுக்காக 3 நடமாடும் மருத்துவமனைகளும் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் 119 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயனடைகின்றனர். கேரள வெள்ளம், கஜா புயல் போன்ற இயற்கைப் பேரிடரின்போது பாதிக்கப்பட்ட பகுதிக்கே சென்றன இந்த வாகனங்கள்.

ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் `ஈஷா கிராமோத்சவம்`  என்ற பெயரில் மாநில அளவிலான விளையாட்டுப்  போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காகத் தொடங்கப்பட்ட `ஈஷா பசுமை கரங்கள் திட்டம்` மூலம் இதுவரை 3.41 கோடி மரக்கன்றுகள் ஈஷா நர்சரிகள் மூலம் விநியோகிக்கப்பட்டு, விவசாயிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பல தரப்பினரின் பங்களிப்புடன் நடப்பட்டுள்ளன. இதற்காக மத்திய சுற்றுச் சூழல் துறை `இந்திரா காந்தி பர்யவரன் புரஸ்கார்` விருதை வழங்கியுள்ளது.

இதேபோல, நம்மாழ்வார் வழிகாட்டுதலுடன் தொடங்கப்பட்ட ஈஷா விவசாய இயக்கம், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 7,500 விவசாயிகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி அளித்துள்ளது.

மேலும், பள்ளிக்  குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட `ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம்` மூலம்,  2,500 பள்ளிகளில் மரம் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்  45 லட்சம் மரக்கன்றுகளை மாணவர்களே உருவாக்கி, நட்டுள்ளனர்.   இந்திய நதிகளை மீட்டெடுக்கும் ‘நதிகளை மீட்போம் இயக்கம்’ சார்பில்  16 மாநிலங்களுக்குச் சென்று விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டார் ஜக்கி வாசுதேவ். இந்த இயக்கத்தின் திட்ட அறிக்கையை ஏற்றுக்கொண்ட ‘நிதி ஆயோக்’ அமைப்பு,  அதை செயல்படுத்துமாறு அனைத்து  மாநில அரசுகளுக்கும் பரிந்துரை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாட்டுகளும்... விளக்கமும்...

வனம் மற்றும் நிலம் ஆக்கிரமிப்பு, யானை வலசைப் பாதையை மறித்தது, விதிமுறைகளை மீறி ஆதியோகி சிலையை நிறுவியது, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது என்றெல்லாம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளால் புகார்கள் எழுப்பப்படுகின்றன.

இதற்கெல்லாம் என்ன பதில் சொல்கிறது ஈஷா யோகா மையம்?

“சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் ஏற்கெனவே இதுபோன்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கெல்லாம் மிகத் தெளிவாக பின்வருமாறு ஜக்கி வாசுதேவ் பதில் அளித்துள்ளார். `பல்வேறு அமைப்பினர், வெவ்வேறு கொள்கைகளுடன் செயல்படுகின்றனர். தங்களை சுற்றுச்சூழல் சார்ந்த இயக்கத்தினராகவும் அவர்கள்  காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், உண்மையில்  சுற்றுச்சூழலுக்கு எதிரான சிலரது செயல்பாடுகளை நான் தடுத்து நிறுத்தினேன். இதனால்தான், என் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இதில் பல குற்றச்சாட்டுகளை நீதிமன்றமே தள்ளுபடி செய்துவிட்டது. என்  மீதான குற்றச்சாட்டுகளில் ஏதேனும் ஒன்றை நிரூபித்தால்கூட நான் அனைத்திலிருந்தும் விலகிக் கொள்கிறேன். ஏன், இந்த நாட்டை விட்டேகூட செல்லத்தயாராக இருக்கிறேன்’ என ஜக்கி வாசுதேவ் பதில் அளித்துள்ளார். குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள இப்போதும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இதுதான்  எங்கள் பதில்” என்கின்றனர் ஈஷா யோகா மையத்தினர்.

பிரம்மாண்டமாய் மகா சிவராத்திரி

ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்படும் மிகப் பிரம்மாண்ட திருவிழா மகா சிவராத்திரி. 25  ஆண்டுகளுக்கு முன் ஓலைக் குடிசையில்,  70 பேருடன் தொடங்கிய மகா சிவராத்திரி கொண்டாட்டம், தற்போது பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் திருவிழாவாக மாறியுள்ளது. சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், இந்திய கலாச்சாரத்தை பறை சாற்றும் கலை நிகழ்ச்சிகள் என இவ்விழா, பக்தர்களை உற்சாகத்தின் உச்சத்தை தொட வைக்கும். 2017-ல்  நடந்த மகா சிவராத்திரி விழாவில், 112 அடி உயர  ஆதியோகி சிலையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி. “அந்த விழாவை நேரடி ஒளிபரப்பு மூலம் சுமார் 5 கோடி பேர் கண்டு களித்துள்ளனர். இதுதவிர, பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஈஷா மகா சிவராத்திரி விழாவுக்கு நேரில் வந்து, தெய்வீகத்  தன்மையை உணர்ந்து சென்றனர்” என்கின்றனர் ஈஷா யோகா மையத்தினர் பெருமிதத்துடன். வரும் மார்ச் 4-ம் தேதி மாலை 6 மணி முதல் விடிய விடிய இங்கு மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x