

பாமக - அதிமுக கூட்டணியின் மூலம் ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அதிமுக எடுத்துள்ளது என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பாமக - அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை அசோக் நகரில் இன்று செய்தியாளர்களிடம் தொல்.திருமாவளவன் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
"தமிழகத்தில் அதிமுக - பாமக கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிமுகவுடன் பாஜகவும் கூட்டணி அமைக்கும் என தெரியவருகிறது. அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைப்பது, திமுக தலைமையிலான கூட்டணிக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் பாஜகவுக்கும் மாநிலத்தில் அதிமுகவுக்கும் எதிரான உளவியல் மக்களிடையே வலுவாக இருக்கிறது. இது திமுகவின் கூட்டணிக்குச் சாதகமாக அமையும்.
மேலும், அதிமுகவுடன் பாமகவும் கைகோத்திருப்பது திமுக கூட்டணிக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாமக அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு எத்தகைய யுக்தியைக் கையாண்டுள்ளது என்பதை மக்கள் கவனிக்கிறார்கள். தொகுதிப் பங்கீடு தவிர என்னென்ன பேரங்களில் ஈடுபட்டனர் என்பது ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பதிவாகியுள்ளது.
அதிமுக பாமகவை உடன் சேர்த்திருப்பதன் மூலம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். 2009-ல் அதிமுக - பாமக கூட்டணி அமைத்தது. பாமக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதிமுக சில இடங்களில் வெற்றி பெற்றது. திமுக - காங்கிரஸ் - விசிக கூட்டணிக்கு மாபெரும் வெற்றி கிட்டியது. பாமக எந்த அணியில் சேர்ந்தாலும் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு என்பது மாயை தான் என 2009 தேர்தலில் நிரூபிக்கப்பட்டது.
ஜெயலலிதா அரசியலில் கவர்ச்சி நிறைந்த தலைவர். அதிமுக வலுவான கட்சி. ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் பாமக சேர்ந்தும் வெற்றி பெற முடியவில்லை. அதன்பிறகு, பாமகவைக் கூட்டணியில் சேர்ப்பதில்லை என்ற முடிவை ஜெயலலிதா எடுத்தார். மேலும், பாமகவின் முகத்தை சட்டப்பேரவையிலேயே தோலுரித்துக் காட்டினார்.
பாமக வன்முறைக்கு வித்திடும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கட்சி. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இரு தரப்பிலும் பேரம் பேசும் கட்சி என ஜெயலலிதா அம்பலப்படுத்தினார். மரக்காணத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைக்கு பாமகவும், ராமதாஸும் காரணம் என, சட்டப்பேரவையில் ஜெயலலிதா பேசியதை அவைக்குறிப்பில் பதிவு செய்தார்கள். அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய ஆணையிட்டார். அதன் பிறகு தேர்தல்களில் பாமகவோடு அதிமுக கூட்டணி அமைக்கவில்லை.
திராவிடக் கட்சிகளோடு 110 விழுக்காடு கூட்டணி இல்லை என ராமதாஸ் சொன்னார். தன் சொந்த சமூக மக்களை வஞ்சிப்பதற்காக அவர் நடத்திய நாடகம் இது. ஜெயலலிதா, சசிகலா, ஓபிஎஸ்-ஈபிஎஸ், 24 அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை புத்தகமாகவும் வெளியிட்ட ராமதாஸ், அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்"
இவ்வாறு தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.