அடுத்தகட்டமாக எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன? - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அடுத்தகட்டமாக எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன? - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை? அடுத்தகட்டமாக எத்தனை டாஸ்மாக் கடைகள், எப்போது மூடப்படவுள்ளன என, தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மணப்பாறை வழக்கறிஞர் சங்க செயலர் செல்வராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "மணப்பாறை முன்சிப் நீதிமன்றம் முன்பாக டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையானது விதிகளை மீறி அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையால் நீதிமன்றத்திற்கு வழக்குக்காக வரும் பொதுமக்கள், வழக்கறிஞர்கள், பணியாளர்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஆகவே, இந்த டாஸ்மாக் கடையை மாற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. ஆகவே, மணப்பாறை முன்சிப் நீதிமன்றம் முன்பாக அமைந்துள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பாக இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது

அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது, தற்காலிகமாக டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளதாகவும், இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் மதுவுக்கு அடிமையானவர்கள் தமிழகத்திலேயே அதிகமுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக்கின் நிர்வாக இயக்குநரை இந்த வழக்கில் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராக சேர்ப்பதாக உத்தரவிட்டனர்.

மேலும்,

1. தமிழகத்தில் மொத்தம் எத்தனை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் உள்ளன?

2. போதிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய டாஸ்மாக் கடை மற்றும் பார்கள் எத்தனை?

3. டாஸ்மாக் கடை மற்றும் பார்களுக்கு திட்ட வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளதா?

4. எத்தனை டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் தீயணைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது?

5. டாஸ்மாக் மற்றும் பார்களுக்கு உரிமம் கோரி எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர்?

6. உரிமம் வழங்குவதை முறைப்படுத்துவதற்கான விதிகள் என்னென்ன?

7. பார்களில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரிசோதிக்கப்படுகிறதா?

8. அதிகாரிகள் பார்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனரா?

2016 தேர்தல் அறிக்கைகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படுமென அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை? அடுத்தகட்டமாக எத்தனை டாஸ்மாக் கடைகள், எப்போது மூடப்படவுள்ளன? என்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in