Published : 01 Feb 2019 02:24 PM
Last Updated : 01 Feb 2019 02:24 PM

இது மக்களுக்கான பட்ஜெட்; சாமானியர்களுக்கான பிரதமராக மோடி உள்ளார்: தமிழிசை புகழாரம்

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதையடுத்து, 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்தார். இதில், வருமான வரி உச்ச வரம்பு சலுகை 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்வு, 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள குறு விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி என்பது உட்பட பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்நிலையில், இடைக்கால பட்ஜெட் தொடர் குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு தமிழக பாஜக தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்தார்.அப்போது, "இது மக்களுக்கான பட்ஜெட். மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். எதிர்கட்சிகள் இப்போதுதான் ஏழைகளை பற்றி நினைவில் கொள்கிறார்கள்.

ஆனால், சிறு வியாபாரிகளை மனதில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சாமானிய மக்களின் பிரதமராக மோடி உள்ளார். விவசாயிகளுக்கு ஊதியம், வீடு கட்டுபவர்களுக்கு வரிச்சலுகை என, வசதியாக, இலகுவாக வாழக்கூடிய நிலையை பாஜக ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முந்தைய 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்தது. அப்போது ஏழைகளுக்கான குறைந்தபட்ச வருமானத்தை ஏன் அறிவிக்கவில்லை? அப்போது ராகுல்காந்திக்கு ஏழைகள் கண்ணுக்கு தெரியவில்லையா? ஏழைகளைப் பற்றி ராகுலை சிந்திக்க வைத்ததுதான் மோடியின் வெற்றி. காங்கிரஸ் பொய் பிரச்சாரம் செய்கிறது. பாஜக மக்களுக்காக சிந்திக்கிறது. கருப்பு பணம் மீட்கப்பட்டிருக்கிறது.

விவசாயிகளுக்கு நிலவள அட்டை, பயிர் பாதுகாப்புத் திட்டத்தை ஏற்படுத்தியது பாஜக. தமிழகத்தில் மட்டும் 2,600 கோடி ரூபாய்க்கு பயிர்க் காப்பீட்டு திட்டம் மூலம் விவசாயிகள் பயன்பெற்றிருக்கிறார்கள். விவசாயிகள் மீது திடீரென அக்கறை கிடையாது. ஏற்கெனவே அக்கறையுள்ளது" என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x