மூதாட்டி பேரில் உள்ள வீட்டை ஆள்மாறாட்டம்  செய்து வங்கியில் ரூ.1 கோடி லோன்  வாங்கி  மோசடி:   கணவன், மனைவி, ஆடிட்டர்  உட்பட  5 பேர் கைது.

மூதாட்டி பேரில் உள்ள வீட்டை ஆள்மாறாட்டம்  செய்து வங்கியில் ரூ.1 கோடி லோன்  வாங்கி  மோசடி:   கணவன், மனைவி, ஆடிட்டர்  உட்பட  5 பேர் கைது.
Updated on
2 min read

மூதாட்டி பெயரில் உள்ள வீட்டுப்பத்திரத்தை போலி ஆவணம் தயார் செய்து அதன்மூலம் தன் மனைவியை இடத்துக்கு உரிமையாளராக ஆள் மாறாட்டம் செய்து ரூ.1 கோடி மோசடி செய்ததாக கணவன், மனைவி, ஆடிட்டர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, தாம்பரத்தில் சௌத் இந்தியன் வங்கி உள்ளது. இங்கு திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை கிராமத்தில் உள்ள வீட்டுமனைக்கான பத்திரத்தை அடகு வைத்து ரூ.1 கோடி ரூபாய் லோன் வாங்கிய தேன்மொழி(80) என்பவர் பணம் கட்டாததால் வங்கி அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் வழங்கினர். லோன் வாங்கினால் பணம் திருப்பிக் கட்டணும் என்பது தெரியாதா? என அதிகாரிகள் கேட்க லோன் வாங்கினால் கட்டணும் அது தெரியும், ஆனால் அதை ஏன் என்னிடம் வந்து சொல்கிறீர்கள் என தேன்மொழி கேட்டுள்ளார்.

நான் லோன் எதுவும் வாங்கவில்லை, பிறகு எப்படி நோட்டீஸ் வழங்குவீர்கள் என்று கேட்க லோன் வாங்காமல் உங்கள் வீட்டுப்பத்திரம் எங்களிடம் எப்படி பத்திரமாக இருக்கிறது என்று வங்கி அதிகாரிகள் திருப்பிக் கேட்டு, தேன்மொழி ரூ.1 கோடி லோன் வாங்கியதையும், வீட்டுப் பத்திரத்தையும், லோன் வாங்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் தேன் மொழியிடம் காட்டியுள்ளனர்.

வீட்டுப்பத்திரம் என்னிடம் உள்ளபோது நான் எப்படி வங்கியில் லோன் வாங்கியிருப்பேன் என தேன் மொழி திருப்பிக் கேட்டுள்ளார். அவரது ஒரிஜினல் பத்திரத்தையும் காட்டியுள்ளார். பத்திரத்தை பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வங்கியில் கொடுக்கப்பட்ட பத்திரத்தில் உள்ள புகைப்படமும் தேன் மொழி வைத்திருந்த பத்திரத்தில் உள்ள புகைப்படமும் வேறு வேறாக இருந்துள்ளது. இது யார் படம் என வங்கி அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

அதையேதான் நான் கேட்கிறேன் என் பத்திரத்தில் வேறொரு புகைப்படத்தை ஒட்டி அதற்கு ஒரு கோடி லோன் கொடுத்துள்ளதாக சொல்கிறீர்களே நீங்கள் உண்மையிலேயே வங்கி அதிகாரித்தானா? நீங்கள் எல்லாம் யார் என கேட்டுள்ளார் தேன்மொழி.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளனர். தேன்மொழியிடம் உள்ள பத்திரம் போன்று போலி பத்திரம் தயார் செய்து அதில் வேறொரு பெண்ணின் புகைப்படத்தை ஒட்டி ஒரிஜினல் போன்று தங்களை ஏமாற்றி ரூ.1 கோடி லோன் பெற்றதாக வங்கி நிர்வாகம் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

புகார் மத்தியக்குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. போலீஸார் தேன்மொழியிடம் விசாரணை நடத்தினர், அப்போது தேன்மொழி கூறிய ஒரு தகவல் போலீஸாருக்கு முக்கிய துப்பாக அமைந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு தேன்மொழி தான் கோழிப்பண்ணை நடத்த ரூ.20 லட்சம் வங்கி லோன் பெற ஆவடி அருகில் உள்ள மிட்டனமல்லியை சேர்ந்த குப்புசாமி (44) என்ற புரோக்கரை அணுக அவர் தேன்மொழியின் பத்திரத்தை வாங்கி ரூ.20 லட்சத்துக்குப் பதில் ஒரு கோடி ரூபாய் லோன் வாங்கி மோசடி செய்ய முயற்சித்துள்ளார்.

இதை அறிந்த தேன்மொழி லோனே வேண்டாம் என பத்திரத்தை பிடுங்கிச் சென்றுவிட்டார். ஆனால் குப்புசாமி  தேன்மொழி கொடுத்திருந்த பத்திரத்தின் கலர் ஜெராக்ஸை வைத்து போலி பத்திரத்தை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த மோகன் (எ) மோகன்குமார் (46) அவரது நண்பரான முரளிதரன் (49) மற்றும் சீனிவாசன்(53) ஆகியோருடன் சேர்ந்து  போலி ஆவணங்கள் தயாரித்து தனது மனைவி மல்லிகா(39)வை தேன்மொழியாக ஆள்மாறாட்டம் செய்து வங்கியில் சமர்ப்பித்து 2017-ம் வருடத்தில் ரூ.1 கோடி கடன் பெற்றுக்கொண்டு மேற்படி வங்கிக்கு கடனை திருப்பி செலுத்தாமல் அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.

போலீஸார் மேற்கண்ட நபர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. இதையடுத்து குப்புசாமி, அவரது மனைவி மல்லிகா, ஆடிட்டர் மோகன் (எ) மோகன்குமார், முரளிதரன், சீனிவாசன் ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். கைது செய்யப்பட்ட மோகன் (எ) மோகன் குமார்  தன்னை ஆடிட்டர் என அறிமுகப்படுத்திக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றியுள்ளதும், போலி ஆவணங்களை தயாரித்து வேறு சில வங்கிகளில் சமர்ப்பித்து லோன் வாங்கியுள்ளதும் தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in