Last Updated : 13 Feb, 2019 05:02 PM

 

Published : 13 Feb 2019 05:02 PM
Last Updated : 13 Feb 2019 05:02 PM

எம்எல்ஏக்கள் இறப்பால் காலியாகும் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தாமல் அதே கட்சிப் பிரதிநிதியை எம்எல்ஏவாக நியமிக்கலாம்: உயர் நீதிமன்றம் யோசனை

சட்டப்பேரவை உறுப்பினர்கள் மரணம் அடைவதால் காலியாகும் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தி மக்கள் பணத்தை வீணடிப்பதற்குப் பதில், இறந்த உறுப்பினரின் கட்சியின் பிரதிநிதி ஒருவரை ப எம்எல்ஏவாக நியமிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை யோசனை தெரிவித்துள்ளது.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த தாமோதரன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்த முருகன் வாதிட்டார்.

விசாரணையின் போது நீதிபதிகள், எம்எல்ஏக்கள் மரணம் அடைவதால் காலியிடம் ஏற்படும் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதால் மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க எம்எல்ஏக்கள் தகுதியிழப்பு செய்வதால் காலியாகும் தொகுதிகளை தவிர்த்து, மரணம் அடைவதால் காலியாகும் தொகுதிகளில் மரணம் அடைந்த எம்எல்ஏ சார்ந்த கட்சியின் பிரதிநிதி ஒருவரை எம்எல்ஏவாக நியமனம் செய்யலாம். இதனால் இடைத்தேர்தலுக்காக மக்கள் வரிப்பணம் செலவாவது தடுக்கப்படும். இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்கலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பின்னர் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x