Published : 26 Feb 2019 03:19 PM
Last Updated : 26 Feb 2019 03:19 PM

இந்தியாவிடம் வாலாட்டினால் என்ன நடக்கும் என்பது பாகிஸ்தானுக்கு உணர்த்தப்பட்டுள்ளது: ராமதாஸ்

இந்தியாவிடம் வாலாட்டினால் எத்தகைய மோசமான விளைவுகள் ஏற்படும் என்பது பாகிஸ்தானுக்கு உணர்த்தப்பட்டுள்ளது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "பாகிஸ்தானின் பாலாகோட் வனப்பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி அழித்துள்ளன. இந்திய மக்களிடம் நிம்மதியையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தியுள்ள இந்த துணிச்சலான நடவடிக்கை பாராட்டத்தக்கது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்தியத் துணை ராணுவப்படை மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கடந்த 15 ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது இந்திய மக்களிடையே பெரும் துயரத்தையும், கடுமையான கோபத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இதற்கு காரணமானவர்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் இருந்து வந்தது.

இந்த நிலையில் தான் இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானின் பாலாகோட் வனப்பகுதியில் ஊடுருவி, மலை மீது செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்திருக்கின்றன.

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் மெளலானா யூசுஃப் அசார் தலைமையில் செயல்பட்டு வந்த 4 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும், இத்தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியப் படைகளின் தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு அனைவரும் எதிர்பார்ப்பதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று போர்ப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புல்வாமா மாவட்டத்தில் நடத்தியது போன்ற மற்றொரு தீவிரவாதத் தாக்குதலை நடத்த பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டிருந்ததாகவும், அதை முறியடிக்கவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது.

இந்தியப் படைகளின் இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டத் தக்கது. இதன்மூலம் இந்தியாவிடம் வாலாட்டினால் எத்தகைய மோசமான விளைவுகள் ஏற்படும் என்பது பாகிஸ்தானுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலை துணிச்சலாக நடத்திய இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் தளபதிகளுக்கும், அவர்களுக்கு துணையாக இருந்த நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும் பாமக சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன், சிவச்சந்திரன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு இந்தியா செலுத்தியுள்ள மிகப்பெரிய மரியாதையாகவே இந்தத் தாக்குதலை ஒட்டுமொத்த இந்தியர்களும் பார்க்கிறார்கள்.

அதேநேரத்தில் நாசகார பாகிஸ்தான் அதன் பயங்கரவாதிகளை ஏவி விட்டு, இந்தியா மீது தாக்குதல் நடத்தலாம் என்பதால் நாடு முழுவதும் படைகளை மத்திய அரசு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்; நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x