Published : 08 Sep 2014 10:46 AM
Last Updated : 08 Sep 2014 10:46 AM

எழுத்தறிவித்தவன் இறைவன்: இன்று உலக எழுத்தறிவு தினம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக தன்னலம் கருதாது தொண்டாற்றுபவர் நாகர்கோவிலை சேர்ந்த முத்துராமன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை அருகே கோழிவிளை, மார்த்தாண்டம் அருகே ஞாறம்விளை, பிள்ளை யார்விளை, பெருமாள்புரம் ஆகிய இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி எட்டாக்கனியாக தொடர, அவர்களை ஒருங் கிணைத்து கல்வி வெளிச்சம் ஏற்றியிருக்கிறார் முத்துராமன்.

அவரை சந்தித்தபோது, ‘சினிமா துறையில் சாதிப்பதுதான் லட்சியமாக இருந்தது. சிறு வயதில் இருந்தே அதை நோக்கிப் பயணித்து கொண்டிருந்தேன். சென்னை துறைமுகத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துகொண்டே, வாய்ப்பு தேடி அலைந்தேன்.

இலங்கை அகதிகளிடம் நல்ல கல்வித்திறன் இருந்தும், அவர்கள் ஜொலிக்க முடியாமல் இருப்பது தெரியவந்தது. கூலி வேலை பார்க்கும் பெற்றோரால் குழந்தைகளை உயர்கல்வியில் சேர்க்க முடியவில்லை.

கடந்த ஆண்டு மார்த்தாண்டம் ஞாறம்விளை இலங்கை அகதிகள் முகாமில் தினுஷியா என்ற மாணவி அதிக மதிப்பெண் எடுத்தும், உயர்கல்வி கற்க முடியாமல் தவிப்பதாக தினசரிகளில் செய்தி வெளியாகியிருந்தது. நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் கவனத்துக்கு இதை கொண்டு சென்றேன். அவர்களின் முயற்சியால் தற்போது தினுஷியா சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கிறார்.

ரம்ஜான் பர்த்தனா என்ற அகதி பெண்ணுக்கும் திருநெல்வேலி சட்டக் கல்லூரியில் அகரம் பவுண்டேஷன் மூலம் கல்வி கற்க நிதி அளித்துள்ளனர்.

சென்னையில் உள்ள முழுமதி அறக்கட்டளையை சேர்ந்தவர்களும் குமரியில் இலங்கை அகதிகளின் கல்விக்கு தேவையான நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 இலங்கை அகதிகள் தற்போது பல அமைப்புகள், நண்பர்களின் உதவியால் உயர்கல்வி படித்து வருகின்றனர். நான் வெறும் அணில்தான். இருந்தும் கல்வி எனும் பாலம் கட்ட அணிலாக இருந்த பெருமை நெஞ்சை நிறைக்கிறது.

என்னோடு ஒத்த சிந்தனை யுடைய நண்பர்கள் சேர்ந்து அகிலம் கல்வி அறக்கட்டளையை தொடங்கியுள்ளோம். தொடக்கத்தில், இலங்கை அகதிகளுக் காக குரல் கொடுத்த பல அரசியல் கட்சியினரையும் சந்தித்தேன். ஆனால், அவர்களுக்கு அரசி யலுக்கு மட்டுமே அந்த விவகாரம் தேவைப்பட்டது தெரியவந்தது.

நம்பிக்கை தீபம்

இடையில் சில காலம் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலனிடம் உதவியாளராக இருந்தேன். அவர்தான் எனக்கு நம்பிக்கை தந்து, ‘உன் நோக்கம் நிச்சயம் வெற்றி பெறும்’ என்றார். அந்த நம்பிக்கை தீபம் ஏந்தி ஓடிக்கொண்டிருக்கிறேன். எழுத்தறிவு பெற்றவர்களாக மட்டும் அல்லாமல், இலங்கை அகதி மாணவர்களை சுயதொழில் கற்றவர்களாக தன்னிறைவு பெற்றவர்களாக மாற்றுவதே லட்சியம்’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x