

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவுடன் கூட்டு சேர்ந்துள்ளது பாமக.
திராவிடக் கட்சிகளுடன் இனி ஒருபோதும் கூட்டணி இல்லை எனத் தொடர்ந்து விமர்சித்து வந்த பாமக திடீரென அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்திருக்கிறது.
7 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் என்று உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆளும் அதிமுக, மத்தியில் ஆளும் பாஜக என இரண்டு கட்சிகளையும் மிகக் கடுமையாக விமர்சித்து வந்தது பாமக என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கூட்டணி அமைந்திருக்கிறது. தேர்தல் உடன்படிக்கையை அறிவித்த பன்னீர்செல்வம், "வரவிருக்கும் 2019 மக்களவைத் தேர்தலில், அதிமுகவும் பாமகவும் இணைந்து மெகா கூட்டணியை வெற்றிக் கூட்டணியை தமிழகம், புதுச்சேரியில் அமைத்திருக்கிறது. பாமக 7 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும். மேலும் ஒரு ராஜ்யசபா சீட்டும் பாமகவுக்கு ஒதுக்கப்படுகிறது" என்றார்.
பாமக எந்தப் பக்கம் சாயும் என்று வாதவிவாதங்கள் நடைபெற்றுவந்த நிலையில் இதோ கூட்டணி உறுதியாகிவிட்டது. காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாமக அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.
நிபந்தனை பட்டியல்:
கூட்டணி குறித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், இது வெற்றிக் கூட்டணி, மெகா கூட்டணி. நாங்கள் ஏன் அதிமுவுடன் இணைந்தோம் என்பதை அன்புமணி ராமதாஸ் விளக்குவார். கூட்டணிக்காக நாங்கள் அதிமுகவுக்கு பத்து நிபந்தனைகள் விதித்துள்ளோம் என்றார்.
1.டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட விவசாய பிராந்தியமாக அறிவிக்க வேண்டும், 2.மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், 3.மாநிலத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும், 4.ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், 5.மணல் குவாரிகளை மூட வேண்டும், 6.அரசுப் பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7. தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு, 8. விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் வழங்கிய பயிர்க்கடன்களை ரத்து செய்தல் போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளதாக பாமக கூறியுள்ளது.
இதுவரை தீவிர விமர்சனம் செய்துவிட்டு இன்று நேசக்கரம் நீட்டுகிறீர்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டதாகக் கூறி நழுவினார் ராமதாஸ்.