Last Updated : 01 Feb, 2019 09:34 AM

 

Published : 01 Feb 2019 09:34 AM
Last Updated : 01 Feb 2019 09:34 AM

‘என் மரணத்துக்கு போலீஸ்தான் காரணம்’ என வீடியோ பதிவு செய்துவிட்டு சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர் தற்கொலை; அவதூறாக பேசிய காவலர்களை தேட தனிப்படை: ஆணையர் அறிக்கை தர மனித உரிமை ஆணையம் உத்தரவு

போக்குவரத்து போலீஸார் அவதூறாக திட்டியதால் கால் டாக்ஸி ஓட்டுநர் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்துகொள்ளும் முன்பு அவர் பதிவு செய்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை அவதூறாகப் பேசிய போக்குவரத்து போலீஸாரை அடையாளம் காண தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் விசாரணை நடத்தி 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ராஜேஷ் (25). காஞ்சிபுரம் மாவட்டம் கம்மவார்பாளையம் பகுதியில் தங்கி, சென்னையில் உள்ளதனியார் நிறுவனத்தில் கால் டாக்ஸி ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில், கடந்த 25-ம் தேதி மறைமலைநகர் – சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையங்கள் இடையே தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை தாம்பரம் ரயில்வே போலீஸார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். குடும்ப பிரச்சினை காரணமாக ராஜேஷ் தற்கொலை செய்துகொண்டதாக இந்த வழக்கை ரயில்வே போலீஸார் முடித்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ராஜேஷ் தனது செல்போனில் பேசி பதிவு செய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ராஜேஷ் கூறியிருந்ததாவது:தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியரை காரில் ஏற்றிக்கொண்டு சென்றேன். வழியில் இன்னொரு ஊழியரை ஏற்றிக்கொள்வதற்காக, பாடி மேம்பாலம் அருகே சாலையோரத்தில் காரில் காத்திருந்தேன். அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீஸார் 2 பேர், ‘காரை இங்கு நிறுத்தக் கூடாது’ என்று கூறி திட்டினர். காரின் பின்புறத்தில் அடித்தனர். காரில் பெண் ஊழியர் இருப்பதை பொருட்படுத்தாமல், தரக்குறைவாக, கேவலமாக திட்டினர்.

எங்கு போனாலும் போலீஸார் தொல்லையாக இருக்கின்றனர். இதற்கு முன்புதிருவொற்றியூர் சர்வீஸ் சாலையில் காரை நிறுத்திவிட்டு உள்ளே படுத்திருந்தேன். அப்போது, கார் சக்கரத்தைப் பூட்டிய போலீஸார், ‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்தியதற்காக ரூ.500 அபராதம் கேட்டனர். நான் பில் கேட்டதற்கு, ‘என்னையே எதிர்த்துப் பேசுகிறாயா?’ என்று ஒரு போலீஸ்காரர் கேட்டார். அசிங்கமாக திட்டினார்.

என் சாவுக்கு சென்னை போலீஸ்தான் காரணம். ஒவ்வொரு ஓட்டுநரும் தினமும்செத்துச் செத்து வண்டி ஓட்டுகிறார்கள். ‘நோ பார்க்கிங்’ என்றால் அபராதம் போடுங்கள். கேவலமாக திட்டாதீர்கள். இது என்னோடு முடியட்டும். இதுசம்பந்தமாக முதல்வர் பழனிசாமி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் நடவடிக்கை எடுங்க, இல்லாவிட்டால், மக்களிடம் கொடுத்திடுங்க’’ என்று 3 நிமிடம் 46 விநாடிகளுக்கு அந்த வீடியோ காட்சி நகர்கிறது.

ஆதாரங்கள் அழிப்பு

ராஜேஷின் உறவினர்கள் கூறியதாவது: ராஜேஷுக்கு குடிப் பழக்கம் உள்ளதா? யாரையாவது காதலித்தாரா என்று தாம்பரம் ரயில்வே போலீஸார் எங்களிடம் கேட்டனர். இல்லை என்றோம். பின்னர் ராஜேஷின் 2 செல்போனிகளில் ஒரு செல்போன், ஏடிஎம் கார்டு, பர்ஸ், உடைகள் போன்றவற்றைக் கொடுத்தனர். ராஜேஷின் இன்னொரு ஆண்ட்ராய்டு போனை மிகவும் தாமதமாக கடந்த 29-ம் தேதிதான் போலீஸார் எங்களிடம் தந்தனர்.

அதில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் அழிக்கப்பட்டிருந்தன. இதனால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அழிக்கப்பட்ட தகவல்களை, ‘ரெகவரி சாப்ட்வேர்’ உதவியுடன் எடுத்துப் பார்த்தோம். ராஜேஷ் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு பேசிய வீடியோ இருந்தது. ராஜேஷ் தற்கொலைக்கு போலீஸார்தான் காரணம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.

ராஜேஷ் தற்கொலைக்கு காரணமாக இருந்த போக்குவரத்து போலீஸார் மீதும், தற்கொலை வாக்குமூலம் வீடியோவை அழித்து உண்மையை மறைக்க முயற்சித்த தாம்பரம் ரயில்வே போலீஸார் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தனிப்படை அமைப்பு

ராஜேஷ் தற்கொலைக்கு காரணமான2 போக்குவரத்து போலீஸாரை அடையாளம் காண தென் சென்னை இணைஆணையர் சி.மகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரிக்க போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையரும் உத்தரவிட்டுள்ளார்.

மனித உரிமை ஆணையம்

ராஜேஷ் தற்கொலை தொடர்பாக ஊடகங்களில் வந்த செய்தியை அடிப்படையாக வைத்து, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. நடந்த சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் விசாரணை நடத்தி 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

ஓட்டுநர்கள் மறியல், முற்றுகை

ராஜேஷ் தற்கொலைக்கு காரணமான போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவும், இனி இதுபோல நடக்காமல் தடுக்கவும், ராஜேஷ் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் திரண்டு திருமங்கலம் சிக்னல் மற்றும் போரூர் பகுதிகளில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். மாலையில் 150-க்கும் அதிகமான கால் டாக்ஸி ஓட்டுநர்கள் திருமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

போலீஸுக்கு மனிதாபிமானம் இல்லையா?

காவல் துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம், பொதுமக்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றமும், மாநில உயர் நீதிமன்றங்களும் காவல் துறையினருக்கு தொடர்ந்து ஏராளமான உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன. மக்களின் மனித உரிமைகளை மீறாத வகையில் செயல்படுவது பற்றி காவல் துறை உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை காவலர் வரை அவ்வப்போது தொடர்ந்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

எனினும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, மக்களுக்கு எதிராக மனிதாபிமானம் இல்லாமல் காவல் துறையினர் நடந்துகொள்வது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

தேசிய, மாநில மனித உரிமை ஆணையங்களில் அளிக்கப்படும் புகார்களில், காவல் துறையினருக்கு எதிரான புகார்கள்தான் மிக அதிக அளவில் உள்ளன. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, காவல் துறை அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணையங்கள் அபராதம் விதிக்கும் செய்திகள் வந்துகொண்டே இருந்தாலும், பொதுமக்களை நடத்தும் மனப்பான்மையில், காவல் துறையினரிடம் பெரிய வித்தியாசத்தை காண முடிவதில்லை.

இதில் சமீபத்திய உதாரணம், கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜேஷ் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம்.

மக்களிடம் போலீஸார் ஏன் இப்படி நடந்துகொள்கின்றனர்? அவர்களுக்கு மனிதாபிமானம் இல்லையா? இதுபற்றி பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் சிலர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

வழக்கறிஞர், சமூக ஆர்வலர் சுதா ராமலிங்கம்: சட்டப்படி நடந்து கொள்ள போலீஸார் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு நபரை தற் கொலை செய்யத் தூண்டும் அளவுக்கு போலீஸார் பேசியது வருத் தப்பட வேண்டிய விஷயம். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் போலீஸ் பணிக்கே தகுதியில்லாதவர்கள். ஓட்டுநரை தற்கொலை செய்யத் தூண்டிய 2 போலீஸார் மீதும் குற்ற வியல் நடவடிக்கை, துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்..

மனநல மருத்துவர் தேவராஜ்: அடுத்தவரின் மனம் நோகும்படி திட்டலாம் என்ற எண்ணம் போலீஸாருக்கு ஒரே நாளில் ஏற்பட்டதாக இருக்காது. பலதரப்பட்ட விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களை தினந்தோறும் பார்ப்பதால், மூளையில் ஏற்படும் பாதிப்பு இது. ‘அமைதியாகப் பேசினால் யாரும் கேட்கமாட்டார்கள், திட்டினால்தான் கேட்பார்கள்’ என்று தாங்களாகவே நினைத்துக் கொள்வார்கள். இதுவும் ஒருவகையான மூளை பாதிப்பு நோய்தான். இவர்களுக்கு கட்டாயம் மனநல சிகிச்சை தேவை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x