Published : 04 Feb 2019 10:29 AM
Last Updated : 04 Feb 2019 10:29 AM

இன்று உலக புற்றுநோய் தினம்: நல் வாழ்வுக்கு வழிகாட்டும் புற்றுநோய் விழிப்புணர்வு!

இறைவன் தந்த வாழ்வு ஆரோக்கியம் நிறைந்ததாய் இருக்க வேண்டுமென்பதே ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பு. அதேசமயம், நோய்த் தாக்குதல் ஏற்பட்டுவிட்டால், துவண்டுவிடாமல் தைரியமாய் எதிர்கொள்ள வேண்டும். குறிப்பாக, புற்றுநோய் வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக எண்ணுவது தவறானது. நவீன மருத்துவமும், தொழில்நுட்பமும் புற்றுநோயைக் கட்டுப்படுத்தி, நம்மை மீட்கும். புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வே நமது நல்வாழ்க்கைக்கு வழிகாட்டும். உலக புற்றுநோய் தினமான இன்று (பிப். 4) நாமும் விழிப்புணர்வு பெற்று, மற்றவர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என உறுதியேற்போம்!

நமது உடல் செல்களின் கூட்டமைப்பில் உருவானது. ஆரோக்கியமான செல், உடல் இயக்கத்துக்கான செம்மையான பணியை முடித்து பின் இறந்துவிடும். அப்போது அடுத்த செல் வளர வேண்டும். இதுதான் செல்களின் இயல்பான சுழற்சி முறை. மரபணு அல்லது வெளிக்காரணிகளால் இந்த சுழற்சியில் மாற்றம் ஏற்படும்போது, பயனற்ற அதிக செல்கள் உருவாகி,  வளர்ந்து, திசுக்கட்டிகளாக மாறுகின்றன. ஒன்று தீமை விளைவிக்காத கட்டி, மற்றொன்று புற்றாக மாறக்கூடிய கட்டி.    மாரடைப்பு, பக்கவாதம்போல இது ஒரே நாளில் ஏற்படுவதல்ல. மரபு, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணிகளே இதைத் தீர்மானிக்கின்றன.

"புற்றுநோயை குணப்படுத்த முடியாது. நோயாளி விரைவில் இறந்துவிடுவார். சிகிச்சையால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும் என்றெல்லாம் நிலவும் தவறான கருத்துகளும், அறியாமையால் ஏற்படும் அச்சமுமே புற்றுநோய்க்கு எதிரிகள். புற்றுநோய்களிலேயே பல வகை உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டவை. எனவே, எந்த அளவு பாதிப்பு, குணப்படுத்த முடியுமா, எவ்வளவு காலமாகும் என்றெல்லாம் மருத்துவர்கள்தான் தெரிவிக்க வேண்டும்.

அறியாமை காரணமாக தொடக்கத்தில் அலட்சியப்படுத்திவிட்டு, முற்றும் நிலையில் வருபவர்களை மட்டுமே குணப்படுத்துவது சிரமம். அதேசமயம், ஆரம்ப நிலையிலான நோயை குணப்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் எளிது" என்கிறார் கோவை ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பி.குகன்.  பல ஆண்டுகளாக மக்களிடம் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் தீவிரமாய் ஈடுபட்டுள்ள டாக்டர் பி.குகனை சந்தித்தோம்.

நோய் உருவாக காரணம் என்ன?

"நாடு முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பொதுவாக, புற்றுநோய் வந்துவிட்டால் உயிர்பிழைப்பது கடினம் என்று படித்தவர்கள்கூட நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்தால் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் புற்றுநோயில் இருந்து நம்மைக் காக்கும்.

புற்றுநோய் ஏற்பட மரபு மட்டுமே காரணமல்ல. சுற்றுச்சூழல், உணவுப் பழக்கம், புகையிலை என பல காரணிகள் உண்டு. எனினும், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய்தான் அதிக அளவில் இருக்கிறது. வயது வித்தியாசம், பாலின வேறுபாடின்றி நிறைய பேர் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாக இருக்கின்றனர். நாட்டில் ஒவ்வொரு நாளும் 2,200 பேர் புகையிலைக்குப் பலியாகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. புற்றுநோய் பாதித்தவர்களில் 40 சதவீதம் பேர் புகையிலைப் பழக்கம் உடையவர்கள். குறிப்பாக, புகை பிடிப்பவர்களில் 89 சதவீதத்தினர் 18 வயதுக்குள் இந்தப் பழக்கத்துக்கு உள்ளாகின்றனர்.

சிகரெட், பீடி, பான்பராக், புகையிலை போன்ற பழக்கங்களால்,  வாய், தொண்டை, நுரையீரல், மூச்சுக்குழாய், உணவுக்குழாய், சிறுநீரகம், கணையம், கர்ப்பப்பையின் வாய் ஆகிய உறுப்புகளில் புற்றுநோயை ஏற்படுத்தும். புகையிலைப் பழக்கத்தை நிறுத்துவதே இதற்குத் தீர்வு.

இதேபோல, சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கும்,  புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது. காற்று, நீர், மண் ஆகியவற்றில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருந்தால், அவற்றைப் பயன்படுத்தும் மக்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம்.

உணவுப் பழக்கம், உடற்பயிற்சி!

போதுமான உடற்பயிற்சியின்மை, சமச்சீரற்ற உணவுப் பழக்கம் ஆகியவையும் புற்றுநோய் வருவதற்கான காரணங்களாக அமையலாம். எனவே, தினமும் உடற்பயிற்சி செய்து, உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது நல்லது. சுகவீனமான உடம்பு, நோய்கள் தங்கும் கூடாரமாகிவிடும். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான், நோய்களின் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியும். இதேபோல, ஆரோக்கியமான உணவுப்பழக்கமும் நோய்த் தாக்குதலில் இருந்து நம்மைப் பாதுகாக்கும்.  தாவரங்களில் இருந்து இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், தானிய வகைகள், பழங்கள்,  காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயும், கொழுப்பும் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை அளவுடன் சாப்பிட வேண்டும். அதிகமாக வேக வைக்கப்பட்ட உணவு வகைகளையும், சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உண்பதையும் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளின் கண், ஈறு மற்றும் வாயின் மேற்பகுதி, கன்னத்தின் உட்புறம், நுரையீரல் மற்றும் மூச்சுக்குழல், உணவுப் பாதை, பித்தப்பை, கணையம், பெருங்குடல், ஆண்குறி, விந்துசுரப்பி, மூக்கு, தொண்டை, உதடு, மார்பகம், வயிறு, சிறுநீரகம், சருமம், மூத்திரப்பை, கருப்பை மற்றும் கர்ப்பப்பை வாய், எலும்பு, ரத்தம், மூளை என, நகத்தையும், முடியையும் தவிர அனைத்து உறுப்புகளும் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.மகளிரைப் பொறுத்தவரை, கர்ப்பப்பை புற்றுநோய்க்கு அடுத்து, அதிகம் ஏற்படுவது மார்பகப் புற்றுநோய்தான். மார்பில் உண்டாகும் அனைத்து  கட்டிகளும் புற்றுநோயாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், கட்டிகள் மிகச் சிறிய அளவில் இருந்தாலும், உடனே டாக்டரை அணுகி, பரிசோதனை செய்வது அவசியம். வாய்ப்புற்றுநோய் 48 சதவீதம் ஆண்களுக்கும், 20 சதவீதம் பெண்களுக்கும் வருகிறது. பொதுவாக இந்தியாவில் வாய்ப்புற்றுநோய் அதிகம் உள்ளது. வாய்ப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் புகையிலைப் பழக்கம் உள்ளவர்களாக உள்ளனர்.

வைரஸ் தொற்று தாக்குதலினாலும் புற்றுநோய் உருவாகிறது. எந்த வைரஸ் தொற்றாக இருந்தாலும், அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்கச் செய்கின்றன. இதனால், நோய்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல் இல்லாமல் போகிறது. இதனால் புற்றுநோய் உருவாவதற்கான சாத்தியங்கள் அதிகம் ஏற்படுகின்றன.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடும்பத்தினர் ஆறுதலும், மனவலிமையையும் கொடுக்கவேண்டும். அமைதி, நல்ல எண்ணங்கள், உடற்பயிற்சி, நடைபயிற்சி, தியானம், மருத்துவ தொடர் ஆலோசனைகள் உள்ளிட்டவை அவசியம். உறவினர்களும், நண்பர்களும் புற்றுநோயாளிகளின் எதிர்காலத்துக்கான நம்பிக்கையை உருவாக்க வேண்டும். நவீன மருத்துவ வசதிகள் அதிகரித்திருக்கும் இந்நாளில் புற்றுநோய் குறித்து பயப்படத் தேவையில்லை. உரிய சிகிச்சைகள் மூலம் 60 முதல் 70 சதவீதம் வரை புற்றுநோயைக் குணப்படுத்தலாம் அல்லது கட்டுப்படுத்தலாம். ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி, நோய்க்குத் தீர்வுகண்டு வாழ்வை மீட்டெடுப்போம். எனினும், நோயைக் குணப்படுத்துவதைவிட, அது வராமல் தடுப்பதே சிறந்தது. 

அதற்கான விழிப்புணர்வுப் பணிகளில்தான் முழுமையாக ஈடுபட்டுள்ளோம்"  என்றார் நம்பிக்கையுடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x