சாதுவாக மாறிவிட்டான் சின்னதம்பி; காட்டுக்குள் அனுப்பும் முடிவு இல்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சாதுவாக மாறிவிட்டான் சின்னதம்பி; காட்டுக்குள் அனுப்பும் முடிவு இல்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
Updated on
1 min read

காட்டு யானையின் தன்மை இல்லாததால் சின்னதம்பி யானையைப் பிடித்து முகாமில் அடைப்பதைத் தவிர வேறு வழியில்லை என தமிழக வனத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டு யானை சின்னதம்பி ஊருக்குள் நுழைந்து மக்களின் அன்பைப் பெற்றது. ஆனாலும், அது பயிர்களை நாசம் செய்வதும், காட்டு யானை என்பதாலும் அதை வனத்துக்குள் விடவேண்டும் என வன அலுவலர்கள் முயற்சி எடுத்தும் அது மீண்டும் மீண்டும் ஊருக்குள் வந்து நிற்பதும் வாடிக்கையான நிகழ்வானது.

கும்கி யானையாக மாற்ற உள்ளதாக அமைச்சர் பேச அதற்கு எதிர்ப்பு வலுத்தது. உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. விசாரணையில் உள்ள வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றத் தடை கோரியும், அதைப் பிடித்து முகாமில் வைத்து பராமரிக்க உத்தரவிடக் கோரிய வழக்குகள் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பத்திரிக்கைச் செய்திகளைப் பார்க்கும் போது சின்னதம்பி யானை கடந்த சில நாட்களாக காட்டு யானை போல் செயல்படவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதே சமயம் பயிர்களுக்குப் பாதிப்பும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும் இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த தலைமை வனப் பாதுகாவலர் சஞ்சய் குமார் ஸ்ரீவாத்சவா, யானையைக் காட்டுக்கு அனுப்ப முயற்சித்தும், அது மீண்டும் ஊருக்குள் நுழைந்து விடுகிறது.

மிகவும் சாதுவாக மாறிவிட்டதால் காட்டுக்குள் திருப்பி அனுப்புவது சிரமமானது என யானைகள் நிபுணர் அஜய் தேசாஜி அறிக்கை அளித்துள்ளார். அந்த அறிக்கையின் படி யானையைப் பிடித்து முகாமில் பாதுகாத்து பாரமரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாளை வழக்கை மீண்டும் விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in