Published : 16 Sep 2014 09:27 AM
Last Updated : 16 Sep 2014 09:27 AM

அதிக அளவில் சீனப் பட்டாசுகள் இறக்குமதி: சிவகாசி உற்பத்தியாளர்களுக்கு ரூ.1500 கோடி நஷ்டம்

சீனப் பட்டாசுகள் இறக்குமதியால் சிவகாசியில் 35 சதவீதம் பட்டாசு விற்பனை குறைந்து ரூ. 1,500 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்தனர்.

சீனப் பட்டாசுகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கள்ளத்தனமாக சீனப் பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால், சிவகாசியில் பட்டாசுத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, இந்தத் தொழிலை நம்பியுள்ள சுமார் 5 லட்சம் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகி வருகிறது. சீனப் பட்டாசுகள் வருகை மற்றும் விற்பனையை எதிர்த்து பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக மக்களவையில் அதிமுக உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியபோது, ‘தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பதிலளித்தார்.

கடந்த 4-ம் தேதி சிவகாசிக்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வந்தபோது, அவரிடமும் இது குறித்து வலியுறுத்தப்பட்டது.

அவர் அறிவுறுத்தியதன் பேரில், பாஜக மாநில அமைப்புச் செயலர் மோகனராஜுலு, பாஜக விருதுநகர் மாவட்டச் செயலர் பார்த்தசாரதி ஆகியோருடன் இணைந்து, தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அபிரூபன், பொதுச் செயலர் ஷியாம்சுந்தர், முன்னாள் பொதுச் செயலர் ஆசைத்தம்பி உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்று அமைச்சர் நிர்மலா சீத்தாராமனைச் சந்தித்து சட்டவிரோதமாக சீனப் பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுவதையும், விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுத்தனர்.

இதுதொடர்பாக அபிரூபன் திங்கள்கிழமை அளித்த பேட்டி:

பொம்மைகள் என்ற பெயரில் சுமார் 2 ஆயிரம் கன்டெய்னர்களில் சீனப் பட்டாசுகள் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவை விற்பனைக்காக சில்லறை விற்பனை கடை வரை சென்றுவிட்டது.

இதனால், சில்லறை வியாபாரிகள் மட்டுமன்றி மொத்த வியாபாரிகளும் நிகழாண்டு தங்கள் கொள்முதல் அளவை குறைத்துவிட்டனர். இதனால் கடந்த ஆண்டைவிட நிகழாண்டு 35 சதவீதம் பட்டாசு விற்பனை சரிந்து, சுமார் ரூ. 1,500 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

சீனப் பட்டாசு விவகாரம் குறித்து மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து மனு அளித்தோம்.

மேலும், சீனப் பட்டாசுகள் விற்பனையைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதுமாறும் கேட்டுக் கொண்டோம். இதற்கு, ‘இந்திய மண்ணில் ஒரு தொழில் நசிவடைவதையும், தொழிலாளர்கள் வேலையிழப்பதையும் மத்திய அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. சீனப் பட்டாசு வரத்து அடியோடு கட்டுப்படுத்தப்படும்’ என்று அமைச்சர் உறுதி அளித்தார் என்றார்.

பேட்டியின்போது, சங்கத்தின் பொதுச் செயலர் ஷியாம்சுந்தர், துணைத் தலைவர் பாலாஜி, இணைச் செயலர் அருண் லலித்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

ரூ. 10.30 கோடி சீனப் பட்டாசுகள் பறிமுதல்

சீனப் பட்டாசு விவகாரம் குறித்து மக்களவையில் ராதாகிருஷ்ணன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ள பதில் அறிக் கையில், ‘2011-12-ம் ஆண்டில் சீனப் பட்டாசுகள் தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 2.6 கோடி சீனப் பட்டாசுகள் பறி முதல் செய்யப்பட்டு, ரூ. 1.57 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

2012-13-ம் ஆண்டில் 9 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு ரூ. 5.98 கோடி சீனப் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 8.41 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

2013-14-ம் ஆண்டில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 77 லட்சம் சீனப் பட்டாசுகள் பறி முதல் செய்யப்பட்டு, ரூ. 11.44 லட்சம் அபராதம் வசூலிக்கப் பட்டது.

நிகழாண்டில் கடந்த ஜூன் மாதம் வரை 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 1.49 கோடி சீனப் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x