

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை ஆந்திர மாநில அமைச்சர்கள் வெள்ளீக்கிழமை மீண்டும் பார்வையிட்டனர்.
ஆந்திர மாநில மக்களால் ‘அண்ணாகாரு’ என்று அழைக்கப்படும் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் நினைவாக அம்மாநில அரசு ‘அண்ணா உணவகத்தை’ ஆந்திராவில் விரைவில் திறக்க உள்ளது.
இதற்காக ஆந்திர மாநில அமைச்சர்கள் ஏற்கெனவே சென்னை வந்து இங்கு செயல்படுத்தப்பட்டு வரும் அம்மா உணவகத்தை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து சென்றனர்.
இந்நிலையில் மீண்டும் நேற்று சென்னை வந்த அம்மாநில உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பரிட்டலா சுனிதா, நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பி.நாராயணா, வேளாண் அமைச்சர் பிரத்திபட்டி புல்லாராவ் ஆகியோர் அடங்கிய குழு, சாந்தோம் நெடுஞ்சாலை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை பார்வையிட்டு, அங்கு சமையல் பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் கலந்துரையாடினர்.
பின்னர் ரிப்பன் மாளிகைக்கு சென்ற ஆந்திர அமைச்சர்கள் மேயர் சைதை துரைசாமியை சந்தித்தனர். அவர்களுக்கு மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் ஆகியோர் அம்மா உணவக திட்டம் குறித்து விளக்கினர்.