

வடமாநிலங்களில்தான் நோய்த்தொற்று அதிகம். தமிழகத்தில் நோய்த்தொற்று என்பதே இல்லை. மேலும் கோடைகாலத்தில் நோய்த்தொற்று வராமல் இருக்கவும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
திருவள்ளூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில், ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் 1,300 மருத்துவர்கள், 2,345 செவிலியர்கள் மற்றும் 1000 சுகாதார ஆய்வாளர்கள் ஆகியவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான பணிநியமன ஆணையை, வருகிற 4ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்க இருக்கிறார்.
கடந்த 4 ஆண்டுகளாக, போலியோ இல்லாத தமிழகமாக உருவாகியிருக்கிறது என்பது பெருமையாக இருக்கிறது. அதேபோல், வடமாநிலங்கள்தான் நோய்த்தொற்றுகள் கொண்ட மாநிலமாக இருக்கிறது. தமிழகத்தை நோய்த்தொற்று இல்லாத கிராமமாக கட்டமைத்திருக்கிறோம். மேலும் கோடைக் காலத்தில் நோய்த் தொற்று இல்லாமல், தொடர்ந்து கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.
அதுமட்டுமின்றி, கிராமப்புற சுகாதாரம் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.