Published : 06 Feb 2019 12:15 PM
Last Updated : 06 Feb 2019 12:15 PM

பள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது

பள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி சென்னையில் 24 மணி நேரத்தில் 4 கொலைகள் என்பதைத் தாண்டி 5-வது கொலையாக குப்பைக்கிடங்கில் இளம்பெண் ஒருவரின் ஒரு கை, இரண்டு கால்கள் மட்டும் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்குடி குப்பைக் கிடங்குக்கு கொண்டுவரப்படும். அவ்வாறு வந்த ஒரு லாரியில் கொண்டுவரப்பட்ட  குப்பையில் இளம்பெண்ணின் கை, கால்கள் மட்டுமே பார்சல் செய்யப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இளம்பெண்ணைக் கொலை செய்து கை, கால்களை மட்டும் வெட்டி கச்சிதமாக பார்சல் செய்து குப்பையில் வீசப்பட்டிருந்தது.

இதுகுறித்த தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்சல் செய்யப்பட்ட கை, கால்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடல் வந்த லாரி குறித்து விசாரணை நடத்தியதில் அது கோடம்பாக்கம் பவர் ஹவுசிலிருந்து குப்பையை ஏற்றிவந்தது தெரியவந்தது.

30-லிருந்து 35 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணின் கையில் இரண்டு இடங்களில் பச்சை குத்தப்பட்டிருந்தது. டாட்டூவை வைத்துப் பார்க்கும்போது அப்பெண் வசதியானவர் என்று போலீஸார் கருதினர். கால்களில் மெட்டி உள்ளதால் திருமணமான பெண் என கருதினர்.

கை, கால்கள் மட்டும் கிடைத்த நிலையில் இளம்பெண்ணின் உடல் எங்கே என போலீஸார் தேடினர்.  நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டும் இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களைப் பரிசோதித்த போலீஸாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கொலையாளி எந்தத் தடயத்தையும் விட்டு வைக்கவில்லை.

இந்நிலையில் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் காணாமல் போன பெண்கள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டது. இதில் 40-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், உறவினர்கள் தங்கள் வீட்டுப் பெண்கள் காணாமல் போனதாக வந்தனர். அவர்களில் பலர் உடலைப் பார்த்த பின் தங்களது பெண் இல்லை எனத் தெரிவித்து விட்டனர். இந்நிலையில் போலீஸாரின் விசாரணையில் தூத்துக்குடி டுவிபுரம் 5-வது தெருவைச் சேர்ந்த சந்தியா என்பவர் காணாமல் போனது தெரியவந்தது.

அவரது உறவினர்கள் கை, கால்களைப் பார்த்து அது தூத்துக்குடியில் கடந்த பொங்கலன்று சென்னை சென்ற பின் காணாமல்போன சந்தியா என தெரியவந்தது. சினிமா இயக்குநரான பாலகிருஷ்ணன் காதல் இலவசம் என்ற படத்தையும் எழுதி இயக்கியுள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள். பாலகிருஷ்ணன் பெரும்பாலும் சென்னை ஜாபர்கான் பேட்டையிலேயே வசித்துள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடியில் வசித்த சந்தியாவுக்கு வேறு நபர்களுடன் தொடர்பு உள்ளதாகக் கூறி பாலகிருஷ்ணனுக்கும் சந்தியாவுக்கும் கடந்த தீபாவளி நேரத்தில் பிரச்சினை ஏற்பட்டு உறவினர்கள் சமாதானம் பேசியும் ஒத்துவராததால் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரிமாதம் பொங்கல் பண்டிக்கைக்கு கணவர் பாலகிருஷ்ணனைக் காணவந்த சந்தியா அதன்பின்னர் ஊர் திரும்பவில்லை. கணவர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் பொங்கல் முடிந்து சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார். இந்நிலையில்தான் உடல் பாகங்கள் கிடைத்தன.

உடல் யாருடையது என தெரிந்த உடனே போலீஸார் கணவர் பாலகிருஷ்ணனைப் பிடித்து விசாரணை செய்தனர். போலீஸ் விசாரணையில் கணவர் பாலகிருஷ்ணன், மனைவி சந்தியாவைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். பொங்கலுக்கு சென்னை வந்த சந்தியாவிடம் மீண்டும் குடும்பப் பிரச்சினை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டதில் கடந்த 20-ம் தேதி இரவு மனைவியைக் கொலை செய்துள்ளார்.

பின்னர் உடலை மரம் அறுக்கும் எந்திரத்தால் துண்டு துண்டாக வெட்டி கை, கால்களை குப்பை மேட்டில் வீசியுள்ளார். பாலகிருஷ்ணனை கைது செய்த போலீஸார் மற்ற உடல் பாகங்கள் எங்கு வீசப்பட்டன என்பதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்தும் சந்தியாவின் உடல் குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியின் தவறான தொடர்பே கொலை செய்ததற்கு பிரதான காரணம் என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். முழுமையான விசாரணைக்குப் பின்னரே அனைத்து உண்மைகளும் வெளிவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x