Published : 16 Feb 2019 03:35 PM
Last Updated : 16 Feb 2019 03:35 PM

புதுச்சேரி அரசின் செயல்பாடுகளை முடக்கியிருக்கும் துணை நிலை ஆளுநரை திரும்பப் பெறுக: இரா.முத்தரசன்

புதுச்சேரி அரசின் செயல்பாடுகளை முடக்கியிருக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய பாஜக அரசு மாநில உரிமைகளைப் பறித்து வருவதும், ஒன்றிய பகுதிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை நிராகரித்து, மக்கள் விரோதத் தாக்குதலை நடத்துவதும் தீவிரமாகியுள்ளது.

மத்திய அரசின் ஜனநாயக விரோதச் செயலுக்கு ஆளுநர்களும், துணைநிலை ஆளுநர்களும் 'முகவர்களாக' பயன்படுத்தப்படுகின்றனர்.

அரசியலமைப்பு சார்ந்த கடமைப் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய ஆளுநர்கள் மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் 'விசுவாசிகளாகவே' செயல்படுகின்றனர்.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முடக்கிப் போட்டுள்ளார். பல ஆயிரம் கோப்புகள் ஆளுநர் அலுவலகத்தில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் மக்கள் நலக் காரியங்கள் அனைத்தும் ஆளுநரால் தடுக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளுநர் மாளிகை முன்பு  தர்ணா போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

நான்காவது நாளாக தொடரும் தர்ணா போராட்டத்தை துணைநிலை ஆளுநர் அலட்சியப்படுத்தி விட்டு தலைநகர் டெல்லி சென்று விட்டார்.

இந்த நிலையில் புதுச்சேரி மக்களின்  அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட, போராட்டங்களை விரிவுபடுத்தவேண்டும் என்ற மக்கள் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.

ஆனால், காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற துணைநிலை ஆளுநர், மக்கள் அரசு என்பதை அதிகார வர்க்கத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று  கருதுவதும், துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு மக்களை அச்சுறுத்துவதும் , அடக்குமுறை நடிவடிக்கைகளில் ஈடுபடுவதும் கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பாஜகவின் ஜனநாயக விரோதச் செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த நிலையில் புதுச்சேரி உரிமைகளை மறுத்து, அரசின் செயல்பாடுகளை முடக்கிப் போட்டிருக்கும் துணைநிலை ஆளுநரை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற்று, புதுச்சேரியில் மக்கள் பிரதிகள் அரசும், ஜனநாயக நடைமுறைகளும் செயல்பட வழிகாண வேண்டும்" என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x