

மதுரை, உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 2012-ம் ஆண்டில் 8 காவ லாளி பணியிடங்களும், 20 துப்புரவு தொழி லாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. இதை எதிர்த்து திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கணேசன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் உசிலம்பட்டி மாவட்ட கல்வி அதிகாரி பதில் மனு தாக்கல் செய்தபோது, அதில் தகுதி அடிப்படையிலும், அமைச்சர் கள், எம்எல்ஏக்கள் சிபாரிசு அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்கள் என தனிப்பட்டியல் இருந்தது.
8 காவலாளி பணியிடங்களில் கூட்டுற வுத் துறை அமைச்சர் பரிந்துரையில் ஒரு வரும், மதுரை வடக்கு எம்எல்ஏ பரிந்துரை யில் இருவர், உசிலம்பட்டி எம்எல்ஏ பரிந்துரையில் 2 பேர், மதுரை மாவட்ட அதிமுக செயலர் பரிந்துரையில் ஒருவரும், தகுதி அடிப்படையில் இருவரும் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். 20 துப்புரவு தொழிலாளர் பணியிடங்களில் 10 இடங்கள் அமைச்சர், எம்எல்ஏக்கள் சிபாரிசின் பேரிலும், 10 இடங்கள் தகுதி அடிப்படையிலும் நிரப்பப்பட்டன. இதையடுத்து இது குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சி.வி.சங்கரை நீதிமன்றம் நியமித்தது. அவர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். அவரது அறிக்கை மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதி, சி.வி.சங்கர் புதன்கிழமை நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. சி.வி.சங்கர் நேரில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி கேள்வி எழுப்பியபோது, அரசுப்பணிக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிபாரிசு என்பது வழக்கமான ஒன்று தான் எனத் தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ‘இந்த முறைகேடு குறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு தென்மண்டல காவல் கண்காணிப்பாளர் சேவியர் தன்ராஜ் விசாரிக்க உத்தரவிடப்படுகிறது. அவர் இந்த வழக்கை முழுமையாக விசாரித்து 6 மாதத்தில் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.