Published : 02 Feb 2019 11:29 AM
Last Updated : 02 Feb 2019 11:29 AM

இடைக்கால பட்ஜெட்டுக்கு தொழில்துறையினர் வரவேற்பு: சிறு, குறுந்தொழில்முனைவோர் ஏமாற்றம்

மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டுக்கு தொழில் துறையினர் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். அதேசமயம், சிறு, குறுந்தொழில்முனைவோரும், விவசாயிகள் சங்கமும் இந்த பட்ஜெட் ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளன.

இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன்: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தை ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு உயர்த்துவது என்ற அறிவிப்பு, நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் என்ற அறிவிப்பும், 2030-ம் ஆண்டை இலக்காகக் கொண்டு, 10 அம்சங்கள் அடங்கிய கொள்கைகளை அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கவை.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத் (சைமா) தலைவர் ப.நடராஜ்: விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டம், லட்சக்கணக்கான பருத்தி விவசாயிகளுக்கு பலன் கொடுக்கும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம், கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதேசமயம், செலுத்திய வரியை திரும்பப் பெறும் திட்டம், ஜவுளித் தொழில் மேம்பாட்டு நிதிக்கான ஒதுக்கீடு போன்றவை குறைக்கப்பட்டிருப்பது எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும்.

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் (கொடிசியா) தலைவர் ராமமூர்த்தி: இடைக்கால பட்ஜெட் குறுகிய காலத்துக்கு மட்டும்தான் என்றாலும், இதில் இடம் பெற்றுள்ள அரசின் திட்டங்கள், எதிர்கால நோக்கங்களை வரவேற்கிறோம். மூலதனப்பற்றாக்குறையை கட்டுப்படுத்தியிருப்பதன் மூலம் எதிர்காலத்தில் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். கூடுதல் கடன்களுக்கு 2 சதவீதவட்டி தீர்வு மானியம் வரவேற்கத்தக்கது. குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கினால், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும். சிறு தொழில்கள் தொடங்குவதற்கு குறைந்தபட்ச மூலதனமாக 25 சதவீதம் தேவை என்பதை குறைக்க வேண்டும்.

இந்திய தொழில் வர்த்தகசபையின் கோவை கிளைத் தலைவர் வி.லட்சுமிநாராயணசாமி: இடைக்கால பட்ஜெட் விவசாயிகளுக்கும், வரி செலுத்தும் பொதுமக்களுக்குமானது. இதை நாங்கள்வரவேற்கிறோம். ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவான ஊதியம் பெறும் முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம், எஸ்.சி., எஸ்.டி. மேம்பாட்டு நிதி 25 சதவீதமாக உயர்த்தப்பட்டது, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கவை. அதேசமயம், கோவையை இன்டஸ்ட்ரியல் காரிடாராகஅறிவிக்க வேண்டும் என்றகோரிக்கை ஏற்கப்படாததுஏமாற்ற மளிக்கிறது.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் வி.கிருஷ்ணகுமார்: வேளாண்மைத் துறைக்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் மோட்டார் பம்ப்செட்களின் விற்பனை அதிகரிக்கும். கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் நுகர்வோர் அமைப்பு தலைவர் சி.எம்.ஜெயராமன்: இரண்டாவது வீடு வைத்துள்ளவர்களுக்கும் வரிச் சலுகை என்பது, வாடகையைமட்டுமே வருவாயாக நம்பியுள்ளவர்களுக்கு ஊக்கமளிக்கும். முடங்கியுள்ள ரியல் எஸ்டேட் தொழிலுக்குகைகொடுக்கும். தொழிலாளர்களுக்கான பணிக்கொடை வரம்பை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தியுள்ளது பணியாளர்கள், நடுத்தர வர்க்கத்தினருக்குப் பயனளிக்கும். கால்நடை வளர்ப்போருக்கான ஊக்கத்தொகையும், கடல் போக்குவரத்துக் கான சலுகைகளும் வரவேற்கத் தக்கவை.

ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்: தேர்தல் நெருங்கும் சூழலில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், சிறு தொழிலமைப்புகள் ஆகியோருக்கு உதவும் வகையில் பல நலத்திட்டங்களை தைரியமாக அறிவித்துள்ளது மத்திய அரசு. வருமான வரிச் சட்டத்திலும் நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. மேலும்ரூ.1.5 லட்சம் சேமிப்பு செய்தால் பிரிவு 80சி-ன் படி ரூ.6.5 லட்சம் வரை எந்த வரியும் கட்ட வேண்டியதில்லை. ஆனால், அதற்கு மேல் வரிசெலுத்துவோருக்கு எந்தவிதமான வரிக்குறைப்பும் இருக்காது. மொத்தத்தில் இது வரவேற்கத்தக்க பட்ஜெட்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சு.பழனிசாமி: விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியுதவி மூன்று தவணைகளாக தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவுக்கு பயனில்லை. உணவு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள் எதுவுமில்லை. விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம், நீர்நிலை மேம்பாடு தொடர்பான திட்டங்கள் எதுவுமில்லை. மொத்தத்தில் இது ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்.

கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கே.மணிராஜ்: ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பாக எந்த அறிவிப்பும் இடம் பெறாதது குறுந்தொழில்முனைவோருக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஜிஎஸ்டி வருவாய் இரு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், குறுந்தொழில்முனைவோருக்கு இரு மடங்கு நலிவு ஏற்பட்டிருப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஜாப் ஒர்க் செய்யும் குறுந்தொழில்முனைவோர்கள் மாதந்தோறும் ஜிஎஸ்டி செலுத்த முடியாமல், மூலதனம் இல்லாமல் நலிவடைந்து கூலி வேலைக்கு மாறும் நிலையை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில், ஊரகத் தொழில்முனைவோர் சங்கத் (காட்மா) தலைவர் எஸ்.ரவிக்குமார்: தனிநபர்வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்புஉள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கிறோம். அதேநேரம், ஜாப்ஒர்க்கில் ஈடுபட்டுள்ள குறுந் தொழில்முனை வோர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜிஎஸ்டி-யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையும், அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.25 லட்சம் வரையிலும் 8 சதவீத வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. சில அம்சங்கள் வரவேற்கக்கூடியதாக இருந்தாலும் இது குறுந்தொழில் முனைவோர் களுக்கு மகிழ்ச்சி அளிக்காத இடைக்கால பட்ஜெட்.

கோவை சிட்கோ தொழிற் பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.சுருளிவேல்: இடைக்கால பட்ஜெட்டில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கண்டுகொள்ளப்படவில்லை ன்பது ஏமாற்றம் தருவதாக உள்ளது. தமிழ்நாடு கைத்தொழில்மற்றும் குறுந்தொழில்முனை வோர் சங்க மாவட்டத் தலைவர்ஜே.ஜேம்ஸ்: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் மேம்பாட்டுக்கு பெரிய அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. ஏற்கெனவே, பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றால் முடங்கியுள்ள சிறு, குறுந் தொழில்களை மத்திய அரசு கண்டுகொள்ளவேயில்லை. ஜாப் ஆர்டர் முறையில் செயல்படும் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி-யும் குறைக்காதது மிகுந்த வேதனைக்குரியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x