

இளையராஜா 75 நிகழ்ச்சி தொடர்பான அனைத்து கணக்கு வழக்குகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவை நடத்தவும், தேர்தலை நடத்தவும் கோரி தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் நிதி முறைகேடு செய்த நிலையில், இளையராஜா 75 நிகழ்ச்சி நடத்தப்படுவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
இந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி கல்யாணசுந்தரம், விழாவுக்கு தடை விதிக்க மறுத்ததுடன் நிகழ்ச்சி தொடர்பான கணக்குகளை மார்ச் 3-ல் நடைபெறவுள்ள பொதுக்குழுவில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில், நிகழ்ச்சிக்குத் தடை விதிக்காவிட்டாலும், வரவு செலவு கணக்குகளை சரிபார்க்க இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டுமென சதீஷ்குமார் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் விசாரித்தனர்.
அப்போது நீதிபதி கிருபாகரன், இந்திப் பாடலை கேட்டுக் கொண்டிருந்தவர்களை தமிழில் கேட்க வைத்தவர் இளையராஜாதான். இந்தி இசையே தமிழ்ப் பாடல்களிலிருந்து எடுக்கும் நிலைக்கு கொண்டு வந்தவர் என பெருமிதம் தெரிவித்தார்.
உறுப்பினர் என்ற முறையில் உங்கள் கோரிக்கையை பொதுக்குழுவில் வைக்க வேண்டும். உங்கள் சங்க நிகழ்ச்சியில் உறுப்பினர் என்ற முறையில் கலந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் தமிழகத்தில் மட்டும்தான் எந்த நிகழ்வு என்றாலும் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடுகிறீர்கள் என நீதிபதிகள் அமர்வு மனுதாரரிடம் தெரிவித்தது.
அப்போது சதீஷ்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தியாகேஸ்வரன், நிகழ்ச்சி நடத்துவதில் நிதி முறைகேடு உள்ளது. தனியார் தொலைக்காட்சிக்கு ரூ.7 கோடிக்கு விற்றதாகச் சொல்கிறார்கள். ஆனால் தொகை இன்னும் வசூலிக்கவில்லை என்றும், நிகழ்ச்சி முடிந்த பின் நஷ்டம் என தனியார் டிவி சொன்னால் யாரிடம் வசூலிப்பது? நிகழ்ச்சி நடத்தட்டும், ஆனால் கணக்கைக் கண்காணிக்க அதிகாரியை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
ஆண்டு பொதுக்குழுவில் கணக்கு வழக்குகள் முழுமையாகத் தாக்கல் செய்வதாக தயாரிப்பாளர் சங்கத் தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணா ரவீந்திரன் தெரிவித்தார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நிகழ்ச்சி தொடர்பான கணக்கு வழக்குகளை இரண்டு வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு உத்தரவிட்டனர். மேலும், இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு நிர்வாகியை நியமிக்க வேண்டுமென்ற சதீஷ்குமாரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.