Published : 28 Feb 2019 10:08 AM
Last Updated : 28 Feb 2019 10:08 AM

மறவர், பிறமலைக்கள்ளர் உள்ளிட்ட 68 சமூக மக்களை சீர்மரபு பழங்குடியினராக பெயர் மாற்றம் செய்க: தினகரன்

மறவர், பிறமலைக்கள்ளர், வலையர், தொட்டியநாயக்கர், வேட்டுவகவுண்டர், உள்ளிட்ட 68 சமூக மக்களை சீர்மரபு  பழங்குடியினராக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் 1871-ம் ஆண்டு குற்ற பழங்குடியினர் சட்டம் இயற்றப்பட்டு, வட இந்தியாவில் உள்ள சில சமூகத்தினர் மீது திணிக்கப்பட்டது. தமிழகத்தில் 1911-ம் ஆண்டு குற்ற பழங்குடியினர் சட்டமானது மறவர், பிறமலைக்கள்ளர், வலையர், தொட்டியநாயக்கர், வேட்டுவக்கவுண்டர், ஊராளிகவுண்டர், போயர், ஒட்டர், குறவர் உள்ளிட்ட 68 சமூகத்தினர் மீது திணிக்கப்பட்டு அச்சமூகத்தினர் அனைவரும் அடக்குமுறைக்கு ஆளானார்கள். 

இதன்மூலம் அச்சமூகத்து மக்கள் தங்கள் இயல்பான சமூக நிலையை இழந்து மிகவும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டனர். சமூகம், பொருளாதாரம், கல்வி, வாழ்வாதார நிலையிலும் பின்தங்கி சிரமத்துக்கு ஆளானார்கள். இச்சட்டத்தால், அப்போதைய மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் வாழ்ந்த மறவர், பிறமலைக்கள்ளர் உள்ளிட்ட சமூகத்தினர் கடும் பாதிப்புக்குள்ளானதுடன், 'குற்றப் பரம்பரையினர்' என்றும் அழைக்கப்பட்டனர்.     

இச்சட்டத்தை எதிர்த்து முத்துராமலிங்கத் தேவர் ஆங்கிலேயருடன் போராடிக்கொண்டே, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதன் விளைவாக 05.06.1947 அன்று குற்ற பழங்குடியினர் சட்டம் தளர்த்தப்பட்டது. பின்பு, மேற்குறிப்பிட்ட 68 சமூகத்தவர் மீது 'வழக்கமான குற்றவாளிகள் சட்டம்' இயற்றப்பட்டு புகுத்தப்பட்டது. இப்படி ஏற்கெனவே குற்ற பழங்குடியினர் சட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்த 68 சமூகத்தினர் சீர்மரபு பழங்குடியினர் என்று அட்டவணைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு சில சலுகைகளும் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்டது. 

இந்தநிலையில், 30.07.1979 அன்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் எம்.எஸ் 1310-ன் படி சீர்மரபு பழங்குடியினர், சீர்மரபு வகுப்பினர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டனர். இதனால் ஏற்கெனவே அனுபவித்து வந்த சலுகைகள் பறிக்கப்பட்டு, பிற்பட்டோருக்கான சலுகைகள் மட்டுமே இவர்கள் அனுபவிக்கும் நிலை உருவானது. இதன் ஒருபகுதியாக, சீர்மரபு பழங்குடியினருக்கான பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெற்றுவந்த இலவசக் கல்விச் சலுகை முற்றிலும் பறிபோனது. 

இதனால் அந்த 68 சமூக மக்கள் முழுமையான கல்வி அறிவைப் பெறுவது தடைபட்டது. அத்துடன், இந்தப் பெயர் மாற்றத்தின் மூலம் சீர்மரபு பழங்குடியினராக இருந்து வந்தபோது பெற்று வந்த சிறப்பு நிதியை இழந்தது, அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக தனி நிதிக் கழகம் உருவாகாத நிலை, இந்த சமூக மக்களுக்கான பிரச்னைகளை அணுக ஒரு சிறப்பு அதிகாரியை நியமிக்காதது, கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படாதது என பல சிரமங்களுக்கு இம்மக்கள் ஆளானார்கள். 

அதுமட்டுமின்றி குஜராத் போன்ற மாநிலங்களில் அட்டவணைப் படுத்தப்பட்ட பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட வேலைவாய்ப்பு பணியிடங்கள் நிரப்பப்படாதபோதும், கல்வி இட ஒதுக்கீட்டிலும் சீர்மரபு பழங்குடியினரை வைத்து நிரப்ப சட்டம் இருக்கிறது. அதுபோல இங்குள்ள சீர்மரபு வகுப்பினர் அச்சலுகைகளைப் பெறமுடியவில்லை.    

எனவே இழந்த உரிமைகளைப் பெறவும், சமூகம், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விஷயங்களில் உரிய முன்னேற்றத்தை மறவர், பிறமலைக்கள்ளர், வலையர், தொட்டியநாயக்கர், வேட்டுவக்கவுண்டர், ஊராளிகவுண்டர், போயர், ஒட்டர், குறவர் உள்ளிட்ட 68 சமூக மக்கள் பெறவும் அவர்களை மீண்டும் சீர்மரபு பழங்குடியினராக பெயர் மாற்றி அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. 

இதுதொடர்பாக தமிழக அரசு அமைத்த டாக்டர் அதுல்ய மிஸ்ரா தலைமையிலான குழுவினர் ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து அம்மக்களின் கருத்தை கேட்டறிந்திருக்கிறது. இந்த விஷயத்தில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு, 30.07.1979 அன்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண்: எம் எஸ் 1310-ஐ உடனடியாக ரத்து செய்து, மறவர், பிறமலைக்கள்ளர், வலையர், தொட்டியநாயக்கர், வேட்டுவக்கவுண்டர், ஊராளிகவுண்டர், போயர், ஒட்டர், குறவர் உள்ளிட்ட 68 சமூக மக்களை சீர்மரபு பழங்குடியினராக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இதில் தாமதம் ஏற்படுமானால், அம்மக்களோடு சேர்ந்து போராடி அந்த உரிமையை நிலைநாட்ட அமமுக துணை நிற்கும்" என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x