லஞ்ச ஒழிப்பு ஐஜி மீதான பாலியல் புகார்; சிபிசிஐடியில் சாட்சியத்தை பதிவு செய்யுங்கள்: பெண் எஸ்பிக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

லஞ்ச ஒழிப்பு ஐஜி மீதான பாலியல் புகார்; சிபிசிஐடியில் சாட்சியத்தை பதிவு செய்யுங்கள்: பெண் எஸ்பிக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
Updated on
1 min read

லஞ்ச ஒழிப்பு துறை ஐஜி முருகனுக்கு எதிராக பெண் அதிகாரி அளித்த புகார் மீது ஆறு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காதது துரதிருஷ்டவசமானது என அதிருப்தி தெரிவித்த  சென்னை உயர் நீதிமன்றம்  சிபிசிஐடியில் சாட்சியத்தை பதிவு செய்ய பெண் எஸ்பிக்கு அறிவுறுத்தியுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜியாக பணியாற்றிய முருகன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவருக்கு கீழ் பணியாற்றும் பெண் எஸ்.பி ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இந்த விவகாரம் வெளியானதை அடுத்து இந்த புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து டிஜிபி உத்தரவிட்டார்.

புகாரை விசாரித்த விசாகா குழு, ஐஜி முருகன் மீதான புகாரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த பரிந்துரைத்தது. இதை எதிர்த்து ஐஜி முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது துறையிலே விசாகா கமிட்டி உள்ளதாகவும் சிபிசிஐடி விசாரணைக்கு தடைவிதிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

இதேபோல், முருகனை பணிமாற்றம் செய்ய கோரி புகார் அளித்த பெண் எஸ்பியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்,   அரசுதரப்பு வழக்கறிஞரைப் பார்த்து புகாருக்கு ஆளானவரும், பாதிக்கப்பட்டவரும் ஐபிஎஸ் அதிகாரிகள். புகார் அளித்து ஆறுமாதங்களாகியும் பாலியல் வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது  வேதனைக்குரியது, இதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்  என அதிருப்தி தெரிவித்தார்.

அப்போது வாதம் வைத்த ஐஜி முருகன் தரப்பு வழக்கறிஞர் சர்வீஸ் லாவில் பாலியல் புகார் விசாரிக்க வழியில்லை என்று தெரிவிக்க இதுவேறு அதுவேறு பாதிக்கப்பட்ட பெண் குடும்பம், சமூகப்பிரச்சினைகளை தாண்டி புகார் அளிக்க வருவதே அறிது, அதில் இப்படி தாமதமானால் எப்படி,  மேலும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி சம்பந்தப்பட்ட காவல் துறையை அணுக தடுப்பது எது? எனக் கேள்வி எழுப்பினார் நீதிபதி.

பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி துறை ரீதியான நடவடிக்கையைத்தான் எதிர்ப்பார்க்கிறார் குற்ற வழக்கு அல்ல என ஐஜி முருகன் தரப்பு வழக்கறிஞர் வாதம் வைக்க, நீதிபதி உங்களுக்கு என்ன வகையான நடவடிக்கை வேண்டும் என கேட்டார்.

அதற்கு பெண் எஸ்பி எனக்கு குற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூற சிபிசிஐடி போலீஸில் சென்று உங்கள் சாட்சியத்தை பதிவு செய்யுங்கள் என அறிவுறுத்தினார்.

மேலும் குரூப் 1 அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இதுபோன்ற வழக்குகளை கையாள தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் போன்ற மூத்த ஐஏஎஸ் அல்லது ஐ பி எஸ் அதிகாரிகள் தலைமையில் உயர் மட்டக் குழுவை ஏன் அமைக்க கூடாது? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கின் தீர்ப்பை வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in