Last Updated : 21 Feb, 2019 02:53 PM

 

Published : 21 Feb 2019 02:53 PM
Last Updated : 21 Feb 2019 02:53 PM

பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிடும் திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை தடை செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் வழக்கு

பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிடுதல் உள்ளிட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை தடை செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகம்மது ரக்வி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தமிழ் கலாச்சாரம் 12,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து உலக கலாசாரத்தின் தாயாகவும், தொட்டிலாகவும் திகழ்வது தமிழ் கலாச்சாரம் ஆகும். உலகத்தில் மூத்த மொழியாகவும், செம்மொழியாகவும் தமிழ் மொழி திகழ்ந்து வருகிறது. கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, பர்மா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் தமிழர்களின் தொன்மையும், கலாச்சாரமும் பாதுகாக்கப்படுகிறது.

மாபெரும் மக்களாட்சி ஜனநாயக நாடான இந்தியாவினை கூறுபோட வேண்டும் என்ற தேச விரோத எண்ணங்களின் அடிப்படையில் இந்திய பிரதமர், ஆளுநர் ஆகியோருக்கு எதிராக தமிழகத்தில் இருக்ககூடிய திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, திராவிட கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதவாத கட்சிகள், திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழ் புலிகள், மே 17 இயக்கம், தமிழ்தேச மக்கள் முண்ணனி கழகம், விடுதலை தமிழ் புலிகள் உள்ளிட்ட ஒரு சில அமைப்புகள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த கட்சிகள் பிரதமர் தமிழகத்திற்கு வருகை தரும்போது 'GO BACK MODI' உள்ளிட்ட பல வசனங்களை எழுப்பி, கருப்பு பலூன்களை பறக்கவிடுவது என பிரதமருக்கு எதிராக செயல்படுகின்றனர். தமிழகத்தில் ஆளுநருக்கு எதிராகவும் இந்த இயக்கங்கள் செயல்படுகிறது. இதனால் பிரதமரின் நலதிட்டங்கள் முழுமையான தமிழகத்திற்கு கிடைக்கவிடாமல் இந்த கட்சிகள் தமிழகத்தில் பிரச்சினைகளை தூண்டி, தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்படுகின்றன.

பிரதமருக்கு எதிராக மக்களை பிளவுபடுத்துவதுடன் தேச விரோத எண்ணத்துடன் இந்த இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு செய்வது அரசியலமைப்புச் சட்டம் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வர், ஆளுநர், அமைச்சர்கள் ஆகியோரை அவமதிப்பதாக உள்ளது. தற்சமயம் புதுச்சேரியில் இருசக்கர வாகன விழிப்புணர்வில் ஈடுபட்ட ஆளுநருக்கு எதிராக பொதுமக்களை தூண்டிவிட்டு, பொதுசொத்துகளை சேதபடுத்தி வருகின்றனர்.

எனவே, நலத்திட்டங்களை செயல்படுத்த தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிடுதல், பிரதமருக்கு எதிராக வசனங்களை கூறுதல் என தேசவிரோத கருத்துகளை மக்களிடம் பரப்பிவரும் திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும்.

மேற்கண்ட கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பதுடன், சமூக வலைதளங்களில் தேசவிரோத கருத்துக்களை பரப்புவதை தடை செய்ய வேண்டும் என 30.01.2019 அன்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியுள்ளேன். இந்த மனுவின் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று (வியாழக்கிழமை) விசாரித்த  நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, வழக்கில் தொடர்புடைய கட்சிகளை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x