

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் சார்பில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி 22.01.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கப் பிரதிநிதிகளை முறையாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை தமிழக அரசு ஜனநாயக கோட்பாடுகளை மீறி கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்நிலையில் பொதுமக்கள், மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை திரும்பப் பெற்று அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர். ஆனால் பணிக்குத் திரும்பிய ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அவர்கள் 21.01.2019 அன்று வரை பணியாற்றிய பணியிடங்களில் சேர அனுமதிக்காமல் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம், புனையப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் பணியில் சேர மறுக்கும் நிலை, தற்காலிகப் பணி நீக்கம் என்று சொல்லி பணியில் அனுமதிக்காத போக்கு, ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளதாகக் கூறி பணி மறுக்கும் நிலை போன்ற பழிவாங்கல் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த ஊழியர் விரோதப் போக்கை கைவிட வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்வது சட்டவிரோதம் என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்தீர்ப்பையும் மீறி தமிழக அரசு செயல்பட்டு வருவது சட்டவிரோதமாகும். மேலும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போராடிய போது, பொதுமக்கள், மாணவர்கள், அரசு நிர்வாகம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவித்து போராட்டத்தை கைவிட வேண்டுமென அறிவித்தனர். தற்போது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் - ஊழியர்களை அலைக்கழிப்பதால் மாணவர்கள், பொதுமக்கள் நலன் இப்போது பாதிப்புக்குள்ளாகாதா என்பதை தமிழக அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
எனவே, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் மீது பழிவாங்கும் போக்குடன் அவர்கள் மீது தொடுத்துள்ள தற்காலிக பணி நீக்கம், பணியிடம் மாற்றம் போன்ற அனைத்து ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் உடனடியாக கைவிட வேண்டுமெனவும், அவர்கள் பணியாற்றிய இடத்திலேயே மீண்டும் அவர்களுக்கு பணி வழங்கிட வேண்டுமெனவும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது'' என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.