Published : 20 Feb 2019 02:31 PM
Last Updated : 20 Feb 2019 02:31 PM

பலமான கூட்டணியால் ஸ்டாலினுக்கு விரக்தி; ஆதங்கத்தில் அநாகரிகமாகப் பேசுகிறார்: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமைந்துவிட்டதால், ஸ்டாலின் விரக்தியில் பேசுவதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று (புதன்கிழமை) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, அதிமுக - பாமக - பாஜக கூட்டணி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "1999-ல் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது. அது சந்தர்ப்பவாத கூட்டணி இல்லையா? நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை, நிறத்தை மாற்றிக்கொள்ளும் கட்சி திமுக. அவர்கள் சொல்வது மக்களிடத்தில் எடுபடாது.

இலங்கையில் தமிழினத்தை அழித்தது திமுக. மத்தியில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருந்த திமுக, நினைத்திருந்தால் தமிழினத்தைக் காப்பாற்றியிருக்கலாம். தமிழினம் காப்பாற்றப்பட வேண்டும். அதனை அழித்தவர்களை தலைதூக்க விடக்கூடாது.

ஒரு தலைவர் நாகரிகமான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். 'சூடு, சொரணை' என ஸ்டாலின் பேசுகிறார். இவையெல்லாம் ஒரு தலைவர் உபயோகிக்கும் வார்த்தைகளா? நாங்களும் அதே பாணியில் பேச முடியும். ஆனால், நாங்கள் நாகரிகமானவர்கள்.

ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல். எங்கள் கூட்டணி இயற்கையாக அமைந்தது. மக்கள் நலக்கூட்டணி. இதனை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மக்கள் தான் எஜமானர்கள். அவர்கள் எங்களை வெற்றி பெறச் செய்து அரியணையில் ஏற்றுவார்கள்.

ஊழல் என்றால் திமுக தான், கூவம் போன்றது. கூவம், கங்கையைக் குறித்து பழி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. திமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் மீது ஊழல் புகார்கள் உள்ளன. தன் மீது புகாரை வைத்துக்கொண்டு மற்றவர்களை குற்றம் சாட்டுவதே ஸ்டாலினுக்கு வழக்கம்.

அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமைந்துவிட்டதால் ஸ்டாலின் விரக்தியுடனும், ஆதங்கத்துடனும் பேசுகிறார்" என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும், பாமக கூட்டணிக்காக முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து முதல்வர் உரிய நேரத்தில் முடிவெடுப்பார் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x