Published : 08 Feb 2019 03:15 PM
Last Updated : 08 Feb 2019 03:15 PM

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக மாற்று மரக் கன்றுகள்:விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க தோட்டக்கலைத்துறை அழைப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்கள் மற்றும் தோட்டக்கலைப்பயிர்களுக்கு  பதிலாக மாற்று மரக்கன்றுகள், செடிகள் இலவசமாக வழங்குவதற்கு தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்காக, அவர்கள் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயல், தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. டெல்டா மாவட்டத்தில் ஒட்டுமொத்த விவசாயத்தையும், தோட்டக்கலைப்பயிர்களையும் நாசம் செய்தன.

தென் தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் தென்னை, வாழை, மாம்மரங்களை அழிந்தன. தற்போது ‘கஜா’புயலில் வீழ்ந்த மரங்கள், செடிகளுக்கு பதிலாக மாற்று மரக்கன்றுகளையும், செடிகளையும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து மதுரை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பூபதி கூறுகையில், ‘‘தோட்டக்கலைத்துறையில் தமிழகத்தில் 61 அரசு தோட்டக்கலை பண்ணைகள் செயல்படுத்தப்படுகின்றன.

இவற்றின் மூலம் தோட்டக்கலைப் பயிர்களுக்கு பழச்செடிகள், காய்கறி நாற்றுகள், தென்னங்கன்றுகள் ஆகிய நடவுப்பொருட்கள் உற்பத்தி செய்து வழங்கப்படுகின்றன. கஜா புயலால் சேதம் அடைந்த பயிர்களை மீண்டும் நடவு செய்ய தேவையான நடவுப்பொருட்கள் அரசு தோட்டக்கலைத்துறை பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தோட்டக்கலை பயிர்களை மீ்ண்டும் பயிர் செய்ய விரும்பும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான தோட்டக்கலை பயிர்களின் நடவுப்பொருட்கள் பெறுவதற்கு அருகில் உள்ள வட்டார அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நடவு செடிகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பெயர், நில அளவு, நில உரிமை விவரங்கள், சாகுபடி செய்ய விரும்பும் பயிர், நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ள பருவம், பரப்பு போன்ற விவரங்களை வட்டார அலுவலர்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த விவரங்கள் வட்டார அளவில் முன் வரிசைப்படி பதிவு செய்தால் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்து முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். இவற்றுக்கு அரசு திட்ட விதிகளுக்கு உட்பட்டு மானியம் வழங்கப்படும். இந்த தகவல்களை ‘உழவன்’ செயலி மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம், ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x