தனிநபர் வருமானம் உயர்வு; வளர்ச்சிப் பாதையில் தமிழகம்: பட்ஜெட்டைத் தாக்கல் செய்து ஓபிஎஸ் பேச்சு

தனிநபர் வருமானம் உயர்வு; வளர்ச்சிப் பாதையில் தமிழகம்: பட்ஜெட்டைத் தாக்கல் செய்து ஓபிஎஸ் பேச்சு
Updated on
1 min read

உயர் வளர்ச்சிப் பாதையில் தமிழகம் செல்ல ஒரு நல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது என, சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழக அரசின் பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. காலை 10 மணிக்கு பேரவையில் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து, மாநிலத்தின் வளர்ச்சி குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

"மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 51.86% சேவைத்துறையின் பங்களிப்பு இருப்பதால் மாநிலப் பொருளாதாரம் சேவை துறையையே சார்ந்துள்ளது. சமச்சீரான வளர்ச்சி அடைந்து அதன் பயன் அனைவரையும் சென்றடைய தொழில்துறை உள்ளிட்ட இரண்டாம் நிலை துறைக்கும், வேளாண் துறைக்கும் தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

2011-12 ஆம் ஆண்டு, மாநிலத்தில் 1 லட்சத்து 3,600 ரூபாயாக இருந்த தனிநபர் வருமானம், 2017-18 ஆம் ஆண்டில் நிலையான விலைகளின் அடிப்படையில் 1 லட்சத்து 42,267 ரூபாயாக உயர்ந்துள்ளது.

2017-18 ஆம் ஆண்டில் முன்மதிப்பீடுகளின் படி, நிலையான விலைகளின் அடிப்படையிலும் தேசிய பொருளாதார வளர்ச்சி 8.20% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதே ஆண்டில் மாநில பொருளாதார வளர்ச்சி 8.09% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

2018-19 ஆம் ஆண்டில் முதல்நிலை மதிப்பீடுகளின் படி மாநில பொருளாதார வளர்ச்சி 8.16 % ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் உயர் வளர்ச்சிப் பாதையில் மாநிலம் செல்ல ஒரு நல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது".

 இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in