

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் போலீஸ் பாதுகாப்போடு பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டனர். இது குறித்து விளக்கம் கேட்க வந்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனை போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி ஆய்வால் நிலத்தடி நீர் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே கதிராமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஆழ்குழாய் கிணறுகளையும் அகற்றி ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி கதிராமங்கலம் மக்கள் கடந்த 20 மாதங்களாக பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அந்த இடத்தில் பராமரிப்பு பணிகளை திருவிடைமருதூர் போலீஸ் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் போலீஸார் பாதுகாப்போடு ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பொதுமக்களிடம் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி போலீஸார் குவிக்கப்பட்டு ஓஎன்ஜிசி குழாய் பராமரிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து ஓஎன்ஜிசி பராமரிப்பு பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என மீத்தேன் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர். போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன், ராஜூ இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கதிராமங்கலம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், ‘‘எந்த ஒரு முன்னறிவிப்பின்றி இந்த பணிகளை தொடர்ந்துள்ளனர். ஏற்கெனவே தண்ணீர் முற்றிலும் சுகாதாரம் இல்லாமல் வந்து கொண்டிருக்கிறது. ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் இதுபோன்ற பராமரிப்பு பணியின் போது பல விதமான ரசாயனங்கள் உள்ளே செலுத்தப்படுகின்றது. இதனால் குடிநீர் முற்றிலும் சுகாதாரம் இல்லாமல் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஓஎன்ஜிசியால் ஒட்டுமொத்த மக்களும் அழியும் நிலையும் உருவாகியுள்ளது.
இதை கேட்க வந்த பேராசிரியர் ஜெயராமன், ராஜு உள்ளிட்டோரை போலீஸார் இழுத்துச் சென்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. உடனடியாக இருவரையும் விடுதலை செய்ய வேண்டும். ஓஎன்ஜிசி பணிகளை நிறுத்த வேண்டும். இல்லையெனில் மீண்டும் குடும்பம் குடும்பமாக ஒன்றுசேர்ந்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என கூறினர். இச்சம்பவம் கதிராமங்கலம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.