Published : 06 Feb 2019 11:03 AM
Last Updated : 06 Feb 2019 11:03 AM

மோடி வெற்றுக் கூச்சலிடுகிறார்; எடப்பாடி பழனிசாமி அரசு திறனற்றது: கமல்ஹாசன் விளாசல்

மோடி தலைமையிலான மத்திய அரசு தன் மீதான விமர்சனக் குரல்களை ஒடுக்குவதற்காகவே அதிகமாக வெற்றுக் கூச்சலிடுகிறது. தமிழகத்தில் ஆளும் எடப்பாடி தலைமையிலான அரசு திறனற்றது என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் சாடியுள்ளார்.

11 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு மண்டல பொறுப்பாளர்களுக்கான மதிப்பாய்வுக் கூட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கமல்ஹாசன் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா?

ஒரு மாநிலத்தின் நலனைப் பேணுவதில் தேசிய அரசியலில் ஈடுபடுவது என்பது இன்றியமையாதது. அது ஒருங்கிணைந்த அம்சமும்கூட. அந்த வகையில் மக்கள் நீதி மய்யத்தை சில அரசியல் கட்சிகள் கூட்டணிக்காக அணுகி வருகின்றன.

ஆனால், கூட்டணிக்காக எங்கள் கொள்கைகளில் நாங்கள் எவ்வித சமரசமும் செய்ய முடியாது அல்லவா? அதனால், கூட்டணி அமைப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதுதவிர எங்களால் சில கட்சிகளுடன் எப்போதுமே இணைய முடியாது.

எனவே, சரியான நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம். அந்த முடிவு மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். ஒன்றுமட்டும் நிச்சயம். எங்கள் மீது ஏறி யாரும் சவாரி செய்ய முடியாது.

தமிழகத்தில் வாக்குகளுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரம் இருக்கும் சூழலில் நீங்கள் எப்படி நிலைமையை எதிர்கொள்ளப்போகிறீர்கள்?

மற்ற கட்சிகளுக்கு பணபலம் இருக்கிறது. ஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் வரிப்பணத்தால் நிரம்பும் கருவூலத்தைச் சுரண்டுவார்கள். ஆனால் மக்கள் நீதி மய்யம் சாமான்ய மக்களின் ஆதரவை நம்பியே தேர்தலைச் சந்திக்கிறது.

தமிழகத்தில் எப்போதுமே திராவிடக் கட்சிகள்தான் வெற்றி பெறுகின்றன. தேசியக் கட்சிகளுக்கு இங்கு ஏன் இடமிருப்பதில்லை?

திராவிட இயக்கம் மற்றும் கொள்கை தொடர்பாக இங்கே தவறான புரிதலே இருக்கிறது. திராவிடக் கொள்கை காலத்தால் விளைந்த கட்டாயம். அது இனம் சார்ந்தது. அந்தக் கொள்கை இல்லாவிட்டால்கூட வேறு ஏதாவது சித்தாந்தம் அந்த இடத்தை நிரப்பியிருக்கலாம்.

எங்களது எதிர்ப்பு இந்திக்கு எதிரானது அல்ல. இந்தியை எப்படிச் சுமத்துகிறார்கள் என்பதற்கு எதிரானது.

மத்தியில் நரேந்திர மோடி ஆட்சி, மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி. உங்கள் கருத்து என்ன?

மத்தியில் ஆளும் மோடி ஆட்சி தன் மீது எழும் விமர்சனக் குரல்களை ஒடுக்குவதற்காகவே வெற்றுக் கூச்சலிடுகிறது. தேசம் அதன் மதச்சார்பின்மை தன்மையை இழந்து வருகிறது. சகிப்பின்மை மங்கி வருகிறது.

தமிழக அரசை யாரும் மதிப்பீடு செய்யவே தேவையில்லை. ஏனெனில் அது திறனற்றது. அது நேராக ஆட்சியிலிருந்து அனுப்பப்பட வேண்டிய அரசு. தமிழக மக்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர்களாலும் தோல்விகளாலும் தவித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் எல்லாம் துண்டுதுண்டாகவே நிற்கின்றன. மோடிக்கு எதிராக இவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை அடையாளம் காட்ட இயலாமலேயே இருக்கின்றன. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? 

இது எதிர்க்கட்சியின் பாதகம். இது நிச்சயமாக மக்கள் மனங்களில் தலைமை தொடர்பாக ஐயங்களை எழுப்பும். கூட்டணியின் ஆதாரத்தின் மீதும் கேள்விகளை எழுப்பும்.

ஊழல், இலவசங்கள், மதுவிலக்கு... இவற்றின் மீது உங்கள் பார்வை என்ன? 

ஊழலே எல்லா சமூகப் பிரச்சினைக்கும் ஆணி வேர். ஊழல் அப்புறப்படுத்தப்பட வேண்டும். இலவசங்கள் எல்லாம் கல்வி, மருத்துவம், தண்ணீர் ஆதாரம் ரீதியில் அமைய வேண்டும்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயப் பிரச்சினை தலைவிரித்தாடும். அரசியல்வாதிகளே கூட இதில் இறங்குவார்கள். எனவே, மதுவிலக்கு என்பது படிப்படியாக அமல்படுத்த வேண்டும். மதுவுக்கு அடிமையானவர்களுக்கு உரிய மறுவாழ்வு ஏற்படுத்துவதை உறுதி செய்துவிட்டு மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்.

உங்கள் நண்பர் ரஜினி ஏன் அரசியல் பிரவேசத்தை ஒத்திவைத்துக் கொண்டே இருக்கிரார்?

எப்போது தீவிர அரசியலில் ஈடுபட வேண்டுமென்பதை ரஜினிதான் முடிவு செய்ய வேண்டும். அவர் அப்படி ஈடுபவதற்கு அவரைத் தவிர வேறு யாரும் தடங்கலாக இருக்க இயலாது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக  பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றனவே?

நம் காதுகளில் விழும் செய்திகளை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது முதற்கட்டமாக நமக்கு சந்தேகம் ஏற்படத்தான் செய்கிறது. நிச்சயமாக இது தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும். கோடநாடு எஸ்டேட் மர்மம் தொடர்பாகவும் விசாரிக்க வேண்டும். இது துரோகத்தின் அடையாளம். அதனால் தீர விசாரிக்க வேண்டும்.

மக்கள் மனங்களில் கமல்ஹாசன் என்னவாக இருக்கிறார்? நீங்கள் நிறைய மக்கள் சந்திப்புகளை நிகழ்த்துவதால் கள நிலவரம் சொல்லுங்கள்?

மக்கள் என்னை என்னவாகப் பார்க்கிறார்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. ஈரோட்டில் ஒரு வயதான பெண்மணி என்னிடம் வந்து நீங்களும் எங்களை ஏமாற்றிவிடாதீர்கள் என்றார். மக்களை நான் நேரில் சந்திக்கும்போது அவர்களுள் ஒருவனாக உணர்கிறேன். இது எனது பதற்றத்தைத் தணிக்கிறது. பழைய அரசியல்வாதிகள் எல்லோரும் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் மனநிலையிலும் பேராசை மனநிலையிலுமேயே இருக்கிறார்கள். நாங்கள் வளர வளர அவர்களின் மனசாட்சி உறுத்துகிறது. இளைஞர்கள் எங்கள் நம்பிக்கையின் ஆதாரமாக இருக்கிறார்கள்.

பஞ்சாயத்து அளவிலான நல்லாட்சி மீதுதான் உங்கள் கவனம் ஆரம்பித்தது. இப்போது திமுக தலைவர் ஸ்டாலினும் ஊராட்சி சபைகளை நடத்துகிறாரே..

நல்லாட்சி அடிமட்டத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். அரசியலில் நான் காலடி எடுத்துவைத்தபோதே இதைத்தான் சொன்னேன். திமுகவின் இப்போதைய முயற்சி எங்கள் பாணி அரசியலை வழிமொழிவதாக அமைந்துள்ளது.

- தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x