Published : 25 Feb 2019 07:09 AM
Last Updated : 25 Feb 2019 07:09 AM

‘தொகுதி முக்கியம் அமைச்சரே...’

மக்களவைத் தேர்தலில் திமுக - அதிமுக எந்த கூட்டணியில் சேர்ந்தாலும், தேமுதிக வுக்கு சாதகமான, வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளை கேட்டுப் பெறுவதில் அக்கட்சி உறுதியாக உள்ளது.

தேமுதிகவை எப்படியாவது தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் முனைப்பாக உள்ளன. இரு கட்சிகளும் தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றன.

இந்த பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் தீவிரமாக நடக்க, வெற்றி வாய்ப்புக்கான தொகுதிகளை தேர்வு செய்யும் பணியிலும் தீவிரமாக இறங்கியுள்ளது தேமுதிக.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. இதில் திருவள்ளூர், மத்திய சென்னை, வடசென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய 14 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது. அனைத்து தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பை இழந்தபோதிலும், திருப்பூரில் 2-ம் இடம் பிடித்து 1 லட்சத்து 79 ஆயிரத்து 315 ஓட்டுகளை பெற்றது. பல தொகுதிகளில் 3-ம் இடத்தை பிடித்தது. ஆனாலும், 2009 மக்களவைத் தேர்தலில் பெற்றதைவிட வாக்கு சதவீதம் குறைந்திருந்தது.

இதனால், வரும் மக்களவைத் தேர்தலில் தொகுதிகளைத் தேர்வு செய்வதில் தேமுதிக மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

இதுதொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:

வரும் மக்களவைத் தேர்தலில் தேமுதிக முக்கிய பங்கு வகிக்கும். அதிமுக, திமுககூட்டணிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 5 முதல்8 தொகுதிகளைப் பெற முயற்சித்து வருகிறோம்.

யாருடன் கூட்டணி அமைத்தாலும், தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ள தொகுதிகளை கேட்டுப்பெறுவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. யாருடன் கூட்டணி என்று கட்சித் தலைவர் விஜயகாந்த் இறுதி முடிவு எடுத்து விரைவில் அறிவிப்பார். கடந்த 2 தேர்தல்களில் இழந்த செல்வாக்கை தேமுதிக மீண்டும் பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x