Published : 20 Feb 2019 01:00 PM
Last Updated : 20 Feb 2019 01:00 PM

ஸ்டாலினின் வார்த்தைகள் அநாகரிகமானவை; சாக்கடை எங்கு ஓடுகின்றது என சந்தேகம் ஏற்படுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஸ்டாலின் அநாகரிகமான வார்த்தைகளை உபயோகப்படுத்தியுள்ளார் என, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

திருச்சியில் இன்று (புதன்கிழமை) மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக - தமாகா இடம்பெறுமா?

அதிமுக சார்பில் அக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இன்னும் பல கட்சிகள் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது. நல்ல செய்தி கிடைக்கும். எந்தத் தொகுதியில் யார் நின்றாலும் அவர்கள் பாஜகவின் வேட்பாளர் என்ற மனநிலையில் பணி செய்வோம்.

அதிமுகவை பலமுறை பாஜக விமர்சித்திருக்கிறது. இப்போது எப்படி பிரச்சாரம் செய்வீர்கள்?

மோடி மீண்டும் நாட்டை ஆள வேண்டும் என்ற தேவை உள்ளது. அவரின் திட்டங்கள் உலக அரங்கில் இந்தியாவை முதல் நிலைக்குக் கொண்டு வருவதாக உள்ளது. மதம், சாதி வேறுபாடுகளைக் கடந்து கைகோக்க வேண்டிய சூழ்நிலை இனிவரும் 5 ஆண்டுகளுக்கு நிகழவிருக்கிறது. அதற்கு இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அரசியல் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். கூட்டணிக் கட்சிகள் ஊழலுக்கு அப்பாற்பட்டதா என்று பார்க்கத் தேவையில்லை. நாட்டு நலனுக்கு அப்பாற்பட்டு நிற்பவர்கள் ஒருபுறமும், நாட்டு நலனுக்காக ஒன்றுபடுபவர்கள் ஒருபுறமும் உள்ளனர்.

ஸ்டாலின் இக்கூட்டணியை விமர்சித்துள்ளாரே?

ஸ்டாலின் அநாகரிகமான வார்த்தைகளை உபயோகப்படுத்தியுள்ளார். சாக்கடை எங்கு ஓடுகின்றது என்று சந்தேகம் ஏற்படக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x