Published : 18 Feb 2019 09:14 AM
Last Updated : 18 Feb 2019 09:14 AM

ப்ளீஸ்... பாம்புகளை கொல்லாதீங்க!- 5,000 பாம்புகளைப் பிடித்த `ஸ்நேக் அமீன்

பாம்பு பால் குடிக்கும், தேடி வந்து பழிவாங்கும்,  விஷத்தை சேத்து வெச்சி மாணிக்கமா மாத்தும்னு சொல்லறதெல்லாம் பொய்யிங்க. மனுஷனுங்க கிட்டயிருந்து விலகிப் போறதுதான் அதனோட குணம். அத மிதிச்சா, தொந்தரவு செஞ்சாதான் கொத்தும். அதனால, பாம்புகளை கொல்லாதீங்க, ப்ளீஸ்..." என்கிறார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்துள்ள `ஸ்நேக் அமீன்`.

பாம்புகளை கடவுளாய்க் கருதி வழிபடும் மரபு நமக்குண்டு.  புற்றுகளில் பால் ஊற்றி, நாக தேவதையாய் வழிபாடு நடத்துவதும் இந்துக்களின் வழக்கம். ஆனால், அதே பாம்பு வீட்டுக்குள் வந்துவிட்டால் பதறிப்போய்விடுவோம். பாம்பென்றால் படையே நடுங்கும்போது, சாதாரண மக்களாகிய நாம் எம்மாத்திரம். வீரம் பொங்கி, குண்டாந்தடியால் அடித்துக்கொல்லும்வரை ஓயமாட்டோம்.

கோவையைப் பொறுத்த வரை, குடியிருப்புப் பகுதிகளில் பாம்பு புகுந்துவிட்டால், உடனே ஸ்நேக் அமீனுக்குத் தகவல் போய் விடுகிறது. தேடி வந்து, பத்திரமாய் பாம்பைப் பிடித்துச் செல்கிறார் அமீன். ஏ.ஆர்.அமீன் பாதுஷா(38), `ஸ்நேக் அமீனாக` மாறியது எப்படி?

"கோயம்புத்தூர் உக்கடத்துல குடியிருக்கேன். அப்பா அப்துல் ரஷீத், கூலி தொழிலாளி. கோட்டமேடு மண்பவுல் உலூம் பள்ளிக்கூடத்துல 8-வது வரைக்கும் படிச்சேன். குடும்ப சூழ்நிலையால அதுக்கும்மேல படிக்க முடியல. பெரியகடைவீதியில தங்கப் பட்டறையில வேலை செஞ்சேன். 1990-ம் ஆண்டுகள்ல குருவிங்க நெறைய செத்துப்போனதுங்க. அடுத்த தலைமுறை குருவியைப் பாக்கவே முடியாத சூழல் ஏற்பட்டது. இது, உயிரினங்கள் மேல எனக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியது.

பணியைத் தொடங்கிவைத்த பச்சைப் பாம்பு

1998-ல உக்கடம் பகுதியில ஒரு பச்சைப் பாம்பை பிடித்தேன். வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவந்து, ஊழியர் சிங்கராஜ்கிட்ட கொடுத்தேன். அதை சாதாரணமா கையாண்டாரு. அவருகிட்ட பழகி, பாம்புகளைப் பத்தி நிறைய தெரிஞ்சிக்கிட்டேன். அடுத்ததா சாரைப்பாம்பு பிடிச்சேன். தொடர்ந்து, பாம்புகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டதால, என்னைப் பத்தி வெளியில தகவல் பரவியது. அப்புறம் நிறைய இடங்கள்ல இருந்து பாம்ப பிடிக்கச் சொல்லி போன் வரும்.

2005-ல சில காலேஜ் பசங்க எங்கிட்ட வந்து, பாம்பு பிடிக்கறதப் பத்திக் கத்துக் கொடுக்கணும்னு கேட்டுக்கிட்டாங்க. அதுக்கப்புறம், ஆனந்த், குட்டி, வசந்த், மணி, வீரா, சுரேந்தர், அப்சல்னு ஒரு டீம் உருவாச்சி.  முதல்ல பாம்புகளோட குணம் பத்தி அவங்களுக்கு சொல்லிக்கொடுப்பேன். நான் பாம்பு பிடிக்கும்போது கூட்டிக்கிட்டுப் போவேன். அவங்கமேல நம்பிக்கை வந்ததுக்கப்புறம்தான், தனியா பாம்பு பிடிக்க அனுப்புவேன்.

விவசாயிகளின் நண்பன்

உண்மையில், பாம்புங்க விவசாயிகளுக்கு நன்மைதான் செய்யும். ஒரு எலி ஜோடி வருஷத்துல பல்லாயிரக்கணக்கான எலிகளை உற்பத்தி செஞ்சிடும். இதைக் கட்டுப்படுத்தறதுல பாம்புக்குத்தான் பெரிய பங்கிருக்கு. பயிர்களை நாசம் செய்யற எலிகளைக் கொல்லறதால, விவசாயிகளின் நண்பன்னு பாம்புகளை சொல்லுவாங்க. பாம்பு பால் குடிக்காது. நீராகாரத்தை பாம்பால ஜீரணம் செய்ய முடியாது. முட்டையை முழுங்கினாலும், அப்புறம் துப்பிவிடும். எலி, தவளை, சிறிய பறவைக் குஞ்சுங்களைத்தான் சாப்பிடும். எந்தப் பாம்பும் தேடி வந்து பழிவாங்காது. பாம்பை அடிக்கக் கூடாதுங்கறதுக்காக, முன்னோர் சிலர் அப்படி சொல்லியிருக்கலாம். அது ரொம்ப சென்சிடிவ்வான உயிரினம். மனுஷங்களைப் பாத்தா ஒதுங்கிப் போதும். அதே மாதிரி, பாம்புக்கு காது கேக் காது. `மகுடிக்கு மயங்கும், பல மொழிகள் தெரியும்`னு சொல்லறதெல்லாம் கட்டுக்கதை. பாம்பாட்டிங்க நாகப் பாம்பை மட்டும்தான் வெச்சி, வித்த காட்டுவாங்க. ஏன்னா, அதுதான் படமெடுக்கும். பாம்பாட்டிங்களோட கையசைவைப் பாத்து, அப்படியும், இப்படியும் திரும்பும். அவ்வளவுதான். பாம்போட  விஷேசமான இயல்பு என்னான்னா... முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பாம்புகளும் உண்டு. குட்டி போடும் பாம்புகளும் உண்டு. கண்ணாடி விரியன், பச்சை பாம்பு உள்ளிட்டவை குட்டி போடும். மலைப்பாம்பு, நாகப்பாம்பு, சாரைப்பாம்பு போன்றவை குட்டி ஈனும் தன்மை கொண்டவை.

16 அடி வளரும் ராஜநாகம்

பாம்புகளில் ராஜநாகம், கண்ணாடி விரியன், கட்டுவிரியன், பச்சை பாம்பு, கொம்பேறி மூக்கன், தண்ணீர் பாம்பு, கேடைவால் பாம்பு, சுருட்டை பாம்பு, பூனைக்கண் பாம்பு, விரியன், மூங்கில் குழிவிரியன், ஓநாய் முக பாம்பு, குட்டை பாம்பு, பறக்கும் பாம்பு, மண்ணுளி பாம்பு, சாரைப் பாம்பு என ஏராளமான வகைகள் உண்டு. ராஜநாகம் 16 அடி நீளம் வரை வளரும். கண்ணாடி விரியன், கட்டுவிரியன், சுருட்டை விரியன் மற்றும் நாகப் பாம்பு வகைகள்தான் விஷம் கொண்டவை.

பொதுவா, கண்ணாடி விரியன்தான் மனிதர்களை அதிகம் கடிக்கும் தன்மை கொண்டது. மலைப்பாம்பு சாயல்லயே இருப்பதால் அதை அசால்டா பிடிப்பாங்க. அப்ப, அது கடிச்சிடும். பொதுவா, பாம்புங்களை மிதிச்சாத்தான், அது கடிக்கும். நாம தொந்தரவு செய்யாத வரைக்கும் எல்லாமே நல்ல பாம்புதான்.

வனப் பகுதிகள்லதான் பாம்புங்க அதிகமா இருக்கும். ஆனா, மரத்தையெல்லாம் வெட்டி, வனமே இல்லாம பண்ணிக்கிட்டிருக்கோம். அதனாலதான், பாம்புங்க ஊருக்குள்ள நுழையதுங்க. மரம் இருந்தா மழை பெய்யும். மழை பேஞ்சா தவளை இருக்கும். தவளைங்கள பாம்பு சாப்பிடும். இந்த உணவுச் சங்கிலி உடஞ்சி போனதால, எலிகளைத் தேடி பாம்புங்க வெளியில வருது.

சுத்தமா இல்லாத இடத்துல எலிங்க இருக்கும். அதுங்களை தேடி பாம்புங்க வருது.

பாம்பு இருக்கறது தெரிஞ்சா, தீயணைப்புத் துறை அல்லது வனத் துறையினருக்குத் தகவல் கொடுங்க. அவங்க பத்திரமா வந்து பாம்புங்களைப் பிடிச்சிக்கிட்டுப்போய், காட்டுல விட்டுடுவாங்க. பாம்புங்களைக் கொல்லாதீங்க. நான் இதுவரைக்கும் 5 ஆயிரத்துக்கும் மேல பாம்புங்களைப் பிடிச்சிருக்கேன். அதுங்களை ஜூவுல குடுத்துடுவேன். அல்லது வனத் துறை கிட்ட ஒப்படைச்சி, காட்டுல விடச் செய்வேன்.

என்னை விஷமில்லாத பாம்புங்க பலமுறை கடிச்சிருக்கு. ரெண்டு முறை மட்டுமே விஷப்பாம்புகிட்ட கடி வாங்கியிருக்கேன். 2007-ல நாகப்பாம்பு கடிச்சது.  எனக்கு 3 குழந்தைங்க. 2015-ல என் பையன் விளையாடிக்கிட்டிருந்தபோது கீழே விழுந்து, மூளையில அடிபட்டுடிச்சி. இப்ப அவன் கோமாவுல இருக்கான். இப்பெல்லாம் தினமும் 4, 5 இடத்துல கூப்பிடறாங்க.

நானோ அல்லது என்கூட இருக்கற பசங்களோபோய் பாம்பை பிடிப்போம். இதுக்காக எந்த பணம் கேட்டு வாங்கறதில்ல. சிலர் பிரியப்பட்டுக் கொடுத்தா மட்டும் வாங்கிக்குவோம். மனைவி ஷர்மிளா பானு. நான் பாம்பு பிடிக்கறதுல ஆரம்பத்துல அவங்களுக்கு விருப்பமில்ல. ரொம்ப பயந்தாங்க.

அப்புறம் பழகிடுச்சு. வனத் துறையில பாம்பு பிடிக்கற `ஸ்நேக் ஹூக்` உபகரணம் கொடுத்திருக்காங்க. ஓசை, ராக் போன்ற அமைப்புங்க விருதும், சான்றிதழும் கொடுத்திருக்காங்க. இது ரொம்ப ஊக்கம் கொடுத்துச்சி" என்றார் நெகிழ்ச்சியுடன்.

பாம்பு பிடிக்கறது `பிடிச்ச ஹாபி’

ஸ்நேக் அமீனுடன் 7 வருடங்களுக்கு மேலாக பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் வெள்ளலூர் ஆனந்த்(22). "நான் 9-வது வரைக்கும் படிச்சேன்.  அதுக்கப்புறம் பவுண்டரி யூனிட்ல வேலைக்கு சேர்ந்தேன். 2010-ம் ஆண்டுக்கு அப்புறம் அமீன் பத்திக் கேள்விப்பட்டு, அவர்கிட்ட வந்தேன். அவரு பாம்ப புடிக்கப் போகும்போது, கூடவே போவேன். கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டேன். அப்புறம் தனியா போய் பாம்பு பிடிக்க அனுமதிச்சாரு. பாம்பு பிடிக்கறதுல எனக்கு பயமோ, கவலையோ கிடையாது. இதை விரும்பித்தான் செய்யறேன். வேலை நேரம் போக, ஓய்வு நேரமெல்லாம் பாம்பு பிடிக்க போயிடுவேன். இது எனக்கு பிடிச்ச ஹாபி. என்னை மாதிரியே சிலரும் ஸ்நேக் அமீன் கிட்ட கத்துக்கறாங்க" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x