சட்டவிரோத பார்களை உடனடியாக மூட உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பார்களை உடனடியாக மூட உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சட்டவிரோத பார்களை உடனடியாக மூடி, பிப்ரவரி 20-ல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபானக்கடைகள், பார்களில் விலை கட்டுப்பாடு, சுகாதாரம் தொடர்பாக கோவை கருமத்தம்பட்டியை சேர்ந்த விவசாயி பிரபாகரன் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், டாஸ்மாக் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது, அவற்றிற்கு ரசீது வழங்கப்படாதது போன்றவற்றால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், பார்களில் விலைப்பட்டியலோ,  குடிநீர் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளோ  இல்லை.

பெரும்பாலான பார்கள் உரிம கட்டணம் செலுத்தாமல் செயல்படும் நிலை தொடர்வதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்தும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் 2018 அக்டோபர் 1-ல் கொடுத்த மனு, உணவு பாதுகாப்பு துறைக்கு பரிந்துரைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தும் எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை என்பதால் மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததாகவும், அதில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

இந்நிலையில் 2014 டாஸ்மாக் சட்டத்தின் மோசடி தடுப்பு விதிகளின்படி, ரசீது வழங்குவது, கணக்கு தாக்கல் செய்வது போன்றவற்றை உறுதி செய்யும் வகையில் சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

அதேபோல பார்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடை செய்வதுடன், பார்களில் சுகாதாரம், அடிப்படை வசதிகள் கோரிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டவிரோதமாகவும், 2018 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை அனுமதி பெறாமலும் செயல்படும் 3 ஆயிரத்து 326 பார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கூடுதல் விலைக்கு விற்ற 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதை பதிவு செய்த நீதிபதிகள், சட்டவிரோத பார்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரிடம் தமிழக உள்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை செயலாளர் அறிக்கை பெற்று சட்டவிரோத பார்களை உடனடியாக மூட உத்தரவிட்டனர். அதன்பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிப்ரவரி 20-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in