

பாட்டில், கேன்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என தமிழக காவல்துறை, அனைத்து பெட்ரோல் பங்க்குகளுக்கும் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. சமூக விரோதிகள் பெட்ரோல் குண்டுகள் தயாரிப்பதைத் தடுக்கவே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் சாதாரணமாக நடைபெறத் தொடங்கியுள்ளன. பசுபதிபாண்டியன் கொலை வழக்கு விசாரணைக்கு, திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்த தூத்துக்குடி சுபாஷ் பண்ணையார், அவரது ஆதரவாளர்கள் மீது கடந்த ஒரு ஒன்றரை ஆண்டில் திண்டுக்கல் நீதிமன்றம், காமலாபுரம் பிரிவு, தாடிக்கொம்பு ஆகிய 3 இடங்களில் பசுபதிபாண்டியன் ஆதரவாளர்கள் பெட்ரோல் குண்டுகள், நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் அதிர்ஷ்டவசமாக பெட்ரோல் குண்டுகள் வெடிக்காததால் இரு இடங்களில் சுபாஷ்பண்ணையார் ஆதரவாளர்கள் தப்பினர். இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் போலீஸாரின் நடவடிக்கை காரணமாக வெடிகுண்டுகள், வெடிமருந்துகள் தயாரிப்புகள் ஓரளவு தடுக்கப்பட்டுள்ளன. அதனால், சமூகவிரோத செயல்கள், கொலை சதி திட்டங்களில் ஈடுபடுவோர் சமீபகாலமாக கேன், பாட்டில்களில் பெட்ரோல் வாங்கிச் சென்று பெட்ரோல் குண்டுகள் தயாரிப்பதாக கூறப்படுகிறது. அதனால், தமிழ்நாடு காவல்துறை தற்போது பாட்டில், கேன்களில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் கேட்டு வருவோருக்கு வழங்கக்கூடாது என புது உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில்...
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பெட்ரோல் பங்க்குகளுக்கு எஸ்.பி. ஜெயச்சந்திரன் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியுள்ளார். இந்த உத்தரவு, பங்குகளில் ஒட்டப்பட்டுள்ளது. அதில், பங்க்குகளுக்கு வரும் வாடிக்கையாளர் வாகனங்களுக்கு மட்டும் எரிபொருள் நிரப்ப வேண்டும். தனியாக கேன், பாட்டில்களில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை நிரப்பச்சொல்லி வரும் நபர்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது. கேன், பாட்டில்களில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் வழங்கி அதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் தாங்களே முழுபொறுப்பாவீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீஸார் ரகசிய கண்காணிப்பு
பங்க் ஊழியர்கள் கேன், பாட்டிலில் எரிபொருட்கள் வழங்கக் கூடாது என்ற உத்தரவை பின்புற்றுகிறார்களா என்பதை தனிப்பிரிவு, உளவுப்பிரிவு மற்றும் உள்ளூர் போலீஸார் ரகசியமாகக் கண்காணிப்பதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். டிராக்டர், ஜே.சி.பி., பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு வாங்கிச் சென்றுதான் எரிபொருட்களை ஊற்ற வேண்டும். போலீஸாரின் இந்த உத்தரவால், கேன்களில் எரிவாங்கி செல்ல முடியாது. அதனால், இந்த உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என பங்க் உரிமையாளர்கள் தெரிவித்தனர்