துணி எடுப்பதுபோல் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பட்டுப்புடவைகள் திருட்டு: சிறுமி உள்ளிட்ட 4 பெண்கள் துணிகரம்

துணி எடுப்பதுபோல் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பட்டுப்புடவைகள் திருட்டு: சிறுமி உள்ளிட்ட 4 பெண்கள் துணிகரம்
Updated on
1 min read

சென்னை அசோக் நகர் 10-வது அவென்யூவில் கோபால் என்பவருக்கு சொந்தமாக  சகுந்தலா என்கிற பெயரில் ஜவுளிக்கடை உள்ளது. இங்கு திருமணம் மற்றும் விசேஷங்களுக்குத் தேவையான பட்டுப்புடவைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இங்கு நேற்று மதியம் 3.30 மணி அளவில் 3 பெண்கள், ஒரு சிறுமி மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 5 பேர்  பட்டுப்புடவைகள் எடுக்க வந்துள்ளனர். மகள் திருமணத்திற்கும் உறவினர்களுக்கும் பட்டுப்புடவைகள் எடுக்க உள்ளதாக தெரிவித்த அவர்கள் விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை எடுத்துக் காண்பிக்கும்படி கேட்டுள்ளனர்.

புடவைகளை எடுத்து ஊழியர்கள் காட்ட அதை எடுங்க, இதை எடுங்க என ஊழியர்களை அந்த 3 பெண்களும் வேலை வாங்கினர். உடன் வந்த ஆண் கடையின் சூப்பர்வைசரிடம் பேச்சு கொடுத்து அவரது கவனத்தைத் திசை திருப்பினார்.

பட்டுப்புடவைகளை தோளில்போட்டுப் பார்ப்பதுபோன்று ஒரு பெண் பிடித்து மறைத்துக்கொள்ள, மற்ற இரண்டு பெண்களும் மற்ற பட்டுப்புடவைகளை மடித்து சிறுமியிடம் தர, அவர் கால்களுக்கிடையே அதை மறைத்து வைத்துக்கொண்டார்.

இதேபோன்று மற்ற பெண்களும் தங்களது ஆடைக்குள் விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை மறைத்து வைத்துக் கொண்டனர். இவ்வாறு ஆளுக்கு நான்கைந்து என 16 பட்டுப்புடவைகளை ஆடைகளுக்குள் மறைத்துக்கொண்டனர்.

பின்னர் பல புடவைகள் உள்ளதால் தங்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது, மணமகளான தங்களது மகளை அழைத்து வந்து புடவைகளை எடுக்கிறோம் எனக்கூறி அங்கிருந்து அனைவரும் வெளியேறினர்.

அவர்கள் சென்ற பின்னர் ஊழியர்கள் கலைத்துப்போட்ட புடவைகளை அடுக்கி வைத்தபோது புடவைகள் எண்ணிக்கை குறைந்ததைக் கண்டுபிடித்தனர். வந்தவர்கள் புடவைகளை லாகவமாக திருடிச் சென்றது தெரியவந்தது. உடனடியாக ஊழியர்கள் வெளியே வந்து  அவர்களைத் தேடினர்.

ஆனால் பலே திருடர்களான அவர்கள் மாயமாக மறைந்துவிட்டனர். பின்னர் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கடை ஊழியர்கள் போட்டுப் பார்த்தபோது அதில் புடவைகளைத் திருடும் காட்சி பதிவாகியிருந்தது.

இதுகுறித்து குமரன் நகர் போலீஸில் கடை உரிமையாளர் கோபால் புகார் அளித்து சிசிடிவி காட்சிகளையும் அளித்தார். வந்தவர்கள் தெலுங்கு மொழியில் பேசியதாக கடை உரிமையாளர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.  சிசிடிவி காட்சிகளை வைத்து குமரன் நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in