ஓசூரில் விமான நிலையம் அமைக்கக் கோரி வழக்கு: ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம்

ஓசூரில் விமான நிலையம் அமைக்கக் கோரி வழக்கு: ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், வழக்கு தொடர்ந்த நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கவேண்டும் என ஓசூரைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், ''ரோஜா நகரம் என அழைக்கப்படும் ஓசூர் நகரத்தில் பல்வேறு தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் அமைந்துள்ளன. அவற்றில் 1 லட்சத்து 25 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுக்கு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிக்கொடுக்கும் நகரமாக ஓசூர் உள்ளது.

இங்கு விளைவிக்கப்படும் ரோஜாப்பூக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் பொருட்கள், வாகனங்கள் ஏற்றுமதி செய்வதற்கு நேரடி விமான சேவை அவசியமாகிறது என்பதால் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என கடந்த ஆண்டு ஜூலை 6-ம் தேதி மத்திய மாநில அரசுகளுக்கும், விமான நிலைய ஆணையத்துக்கும் மனு கொடுத்திருந்தேன். தனது மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்'' என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

'அரசிடம் கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வழக்கு தொடர்வதற்குப் பதிலாக, நேரடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி எப்படி மனுத்தாக்கல் செய்ய முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ஓசூரில் விமான நிலையம் அமைப்பது என்பது அரசின் முடிவுக்கு உட்பட்டது. மனுதாரர் தன்னுடைய கோரிக்கை நீதிமன்றம் மூலமாக நிறைவேற்ற நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரர் சிலம்பரசனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், அந்த தொகையை சிறார் நீதி நிதியத்துக்கு வழங்க உத்தரவிட்டனர். அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அதை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ளவும் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in