

அரசின் திட்டங்கள், சட்டங்கள் பற்றியெல் லாம் விமர்சித்துப் பேசுகின்ற மெத்தப் படித்தவர்களும் வசதி படைத்தவர்களும் தேர்தல் நாளன்று வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என்ற கருத்து பரவ லாகவே இருந்துவருகிறது. ஆனால், வசதி படைத்தவர்களாக இருந்தாலும், அரசியல்வாதிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்றால், தவறாமல் வாக் களித்து விடுகின்றனர். அத்துடன், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டிக் களத்தில் இருந்தால், அவர்களின் வெற்றிக்காக அந்தக் குடும்பத்துப் பெண் கள் தெருவில் இறங்கிப் பிரச்சாரம் செய்வதையும் பார்க்க முடிகிறது.
கனிமொழி, பிரேமலதா போன்றவர்கள் நட்சத்திரப் பேச்சாளர்களாக தமிழகம் முழுவதும் வலம் வந்து பிரச்சாரத்தில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அவர் களைப்போல இல்லாவிட்டாலும், சில முக்கிய அரசியல் குடும்பத்துப் பெண்கள் தேர்தலில் போட்டியிடும் தங்கள் கணவரின் வெற்றிக்காக குறிப்பிட்ட தொகுதியில் மட்டும் தெருத் தெருவாக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
புதிய முகங்கள்
இந்த மக்களவைத் தேர்தலில் வழக் கத்தைவிட சில புதிய முகங் களையும் பிரச்சாரக் களத்தில் பார்க்க முடிகிறது. முன்னாள் மத்திய அமைச் சரும் மத்திய சென்னை திமுக வேட்பாளருமான தயாநிதி மாறனின் மனைவி பிரியா, முதல்முறையாக தனது கணவருக்கு ஆதரவாக தெருவில் இறங்கி பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை கடும் வெயிலிலும் வில்லிவாக்கம் பகுதியில் தெருத் தெருவாக சென்று கணவருக்காக வாக்கு சேகரித்தார். இவர் மைக் பிடித்து பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், பெண்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு தனது கணவர் தொகுதிக்கு செய்திருக்கும் நல்ல விஷயங்களையும் தொலைத்தொடர்புத் துறையில் கொண்டு வந்த திட்டங்களையும் சொல்லி வாக்கு சேகரிக்கிறார்.
கருணாநிதி மகள்
இதேதொகுதியில், தயாநிதி மாறனுக்காக அவரது சித்தியும் திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான செல்வியும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். ‘நான் கலைஞரின் மகள் வந்திருக்கிறேன்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அண்ணா நகர், என்.எஸ்.கே. நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் செய்தார். மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி வாக்கு கேட்கிறார்.
ஊருவிட்டு ஊருவந்து..
சேலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான மோகன் குமாரமங்கலத்தின் மனைவி அம்ரிதா, உத்தரப்பிரதேச மாநிலம் லக் னோவில் இருந்து வந்து கணவருக்காக ஓட்டு வேட்டையாடி வருகிறார். தனது மாமனார் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்கும் இவர், இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி களுக்குச் செல்லும்போது உருது மொழியில் பேசி வாக்கு சேகரிக்கிறார்.
அதேபோல், தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளரான அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா, தனது நாத்தனார் கவிதாவுடன் தொகுதி முழுவதும் சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தனது கணவர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களை சொல்லி ஓட்டு கேட்கிறார். குறிப்பாக, பொது இடங்களில் புகை பிடிக்க தடை, 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பொதுமக்களிடம் கூறி தொடர்ந்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்தப் பெரிய குடும்பத்துப் பெண்களின் தெருப் பிரச்சாரம், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் வெற்றிக்கு உதவுமா?