Last Updated : 18 Feb, 2019 08:44 AM

 

Published : 18 Feb 2019 08:44 AM
Last Updated : 18 Feb 2019 08:44 AM

உலகில் மற்ற நாடுகளைவிட இந்தியா பாதுகாப்பாகவே உள்ளது; தமிழகத்துக்கு நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு: வானிலை மற்றும் புவியியல் ஆய்வாளர்கள் விளக்கம்

தமிழகத்தில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று வானிலை மற்றும் புவியியல் துறை ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 12, 13-ம் தேதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன் தாக்கம் சென்னை, ஆந்திரா அந்தமான் ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது. இவை சிறிய அளவிலான நில அதிர்வுகள் என்பதால் பெரிய பாதிப்புகள் இல்லை. இதற்கிடையே சென்னை உட்பட கடலோர நகரங்களுக்கு பூகம்ப அபாயம் அதிகரித்துள்ளதாக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், தமிழகத்துக்கு அத்தகைய ஆபத்துகள் எதுவும் இல்லை என வானிலை, புவியியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பூகம்பவியல் ஆய்வாளர் சவுரவ் சைடியா கூறியதாவது:வங்கக்கடலில் உருவான பூகம்ப நிகவுழ்கள் இயல்பானவை. இதே பகுதியில் கடந்த ஆண்டு மட்டும் 170 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியா அமைந்துள்ள புவித்தட்டு தொடர்ந்து மேல்நாக்கி வேகமாக நகர்வதால் வங்கக்கடலில் பூகம்பங்கள் உருவாகும் இடங்களில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதுகுறித்து மிக உன்னிப்பாக ஆய்வு செய்து வருகிறோம். எனினும், தமிழகம் பாதுகாப்பான பகுதியில் உள்ளது.

நம்நாட்டை 4 மண்டலங்களாக வானிலை ஆய்வு மையம் பிரித்துள்ளது. காஷ்மீர், இமாச்சல பிரதேசம், அசாம் , அந்தமான், குஜராத் உட்பட்ட மாநிலங்கள் 4-வது மண்டலத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த மண்டலத்தில் உள்ள பகுதிகளுக்குதான் நிலநடுக்க ஆபத்து அதிகம். டில்லி, சிக்கிம், உத்தர பிரதேசம், பிஹார் உட்பட மாநிலங்கள் 3-ம் மண்டலத்தில் உள்ளன. தமிழகம் 2-ம் மண்டலத்தில் உள்ளது. இங்கு 5 முதல் 7 சதவீதம் வரைதான் பூகம்பத்துக்கான வாய்ப்புள்ளது. அவையும் அதிகபட்சம் 6 ரிக்டர் அளவிலே இருக்கும். எனவே, இணையதளங்களில் உலவும் தவறான தகவல்களை நம்பி மக்கள் பயப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னை ஐஐடி கட்டிட பொறியியல் துறை பேராசிரியர் எஸ்.ஆர்.சதீஷ் குமார் கூறும்போது, ‘‘புவியின் மேற்பரப்பு சிறிய, பெரிய அளவிலான தட்டுகளால் ஒன்றிணைந்துள்ளது. இந்தத் தட்டுகள் புவியின் சுழற்சி மற்றும் கடல் அழுத்தம் காரணமாக தொடர்ந்து நகர்கின்றன. அவ்வாறு நகரும்போதும் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் நிலநடுக்கம் அல்லது பூகம்பம் உருவாகிறது. இந்த நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்கும் தொழில்நுட்பம் இன்னும் அறியப்படவில்லை. ஆனால், அதன் தாக்கம் நிலநடுக்கமானி கருவி மூலம் அளவிடப்படுகிறது. இதில் 3 ரிக்டருக்கு கீழான அதிர்வுகள் பதிவாகாது. ஆண்டுதோறும் சராசரியாக 14 செமீ அளவுக்கு புவித்தட்டுகள் நகர்கின்றன. இந்த நகர்வில் ஏற்படும் சிறிய உராய்வுகூட பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது. மேலும், 7 ரிக்டருக்கு மேல் பதிவாகும் அதிர்வே அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவில் இமயமலையை ஒட்டிய மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபர் தீவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்றன. மற்ற பகுதிகளில் அரி தாகவே அதிர்வுகள் உணரப்படும். இயற்கை பேரிடர்களை பொறுத்தவரை தமிழகம் மிக பாதுகாப்பாகத்தான் உள்ளது’’ என்றார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் எல்.இளங்கோ கூறும்போது, ‘‘ஐரோப்பாவும் ஆசியாவும் இணைந்த நிலப்பரப்புகள் எனினும், 2 கண்டங்களும் தனித்தனி தட்டுகளில் அமைந்துள்ளன. அதிலும் இந்தியா, ஆசிய தட்டில் இல்லாமல் தனி தட்டாகவே அமைந்துள்ளது. எனவேதான் இந்தியா துணைக்கண்டம் என்றழைக்கப்படுகிறது. இந்திய மற்றும் ஆசிய தட்டுகள் தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்கின்றன. இந்த நகர்வின்போது 2 தட்டுகள் இடையே ஏற்படும் மோதலால் இந்தியப் பகுதிகளில் நிலநடுக்கம் உருவாகிறது. இமயமலை இன்னும் வளர்வதாக கூறப்படும் காரணமும் இதுதான். புவித்தட்டுகளின் எல்லையில் அமைந்துள்ள இடங்களில்தான் அதிக நில அதிர்வுகள் ஏற்படும். தமிழகத்தை பொறுத்தவரை பெரிய அளவில் நிலநடுக்க பாதிப்பு இருக்காது. கடலோரப் பகுதிகளில் மட்டும் சிறிய அளவில் அதிர்வுகள் ஏற்படலாம்’’ என்றார்.

பூகம்பவியல் ஆய்வாளர் எஸ்.பிரகாஷ் கூறும்போது, ‘‘புவியில் எங்கெல்லாம் மழை பெய்கிறதோ அதைச் சுற்றிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படும். அதிலும் தீவுகளைச் சுற்றிய பகுதிகளில் வாய்ப்புகள் அதிகம். மழை அளவைப் பொறுத்து பூகம்பத்தின் தாக்கம் அமையும். ஏனெனில், கடலில் இருந்து வெளியாகும் உராய்வு வெப்பத்தால் புவித்தட்டுகள் நகர்கின்றன. அதன்படி ஆண்டுதோறும் சராசரியாக 5 லட்சம் நிலநடுக்கங்கள் பூமியில் ஏற்படுகின்றன. இதில் ஒரு லட்சம் நிலநடுக்கங்களே நம்மால் உணரப்படுகின்றன. அதில் 85 சதவீத பூகம்பங்கள் பசிபிக் கடலைச் சார்ந்த பகுதிகளிலேயே உருவாகின்றன.

எனினும், உலகில் மற்ற நாடுகளைவிட இந்தியா பாதுகாப்பாகவே உள்ளது. தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற பகுதிகளில் பூகம்ப அபாயம் இல்லை. அந்தமான் மற்றும் சென்னையின் அமைவிடம் 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் உள்ளதால் நிலநடுக்கம் பாதிக்கும் இடங்களாக உள்ளன. எனினும், மழைக்காலம் முடிந்துவிட்டதால் இனி பூகம்ப அபாயமில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x