Published : 08 Feb 2019 04:44 PM
Last Updated : 08 Feb 2019 04:44 PM

ரபேல் விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டில் மோடி சிக்குகிறார்: ஸ்டாலின் பேட்டி

சுதந்திர இந்தியாவில் இப்படிப்பட்ட ஒரு பெரும் ஊழல் குற்றச்சாட்டில் இதுவரை எவரும் சிக்கவில்லை. ஆனால், மோடி இப்பொழுது சிக்கியிருக்கின்றார். என இந்து நாளேட்டில் வந்த கட்டுரையை மேற்கோள் காட்டி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.

ரபேல் விமான பேர ஊழல் விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் பெரிதாக வெடித்த இந்த விவகாரத்தில் ஏற்கெனவே இந்து பத்திரிக்கையில் அதுகுறித்து கட்டுரை ஒன்று வெளியானது.

தற்போது மீண்டும் இந்து ஆங்கில நாளேட்டில் என்.ராம், ரபேல் விமான பேரத்தில் பாதுகாப்பு அமைச்சகம் பேச்சு வார்த்தை நடத்தும்போதே பிரதமர் அலுவலகம் தனியாக குறுக்கீடு செய்து பேச்சு வார்த்தை நடத்தியதையும், பிரதமர் அலுவலகம் எழுதிய கடிதத்தையும் வைத்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

மீண்டும் இந்த விவகாரம் வெடித்த நிலையில் சட்டப்பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலினிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு அவர் அளித்த பதில்:

ரபேல் ஊழலில் பிரதமர் அலுவலகம் தனியாக இதற்கென்று சமரசம் செய்ததற்கான ஆதாரமாக 2015-ல் ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள். அது தற்போது வெளியாகியுள்ளது. அதுபற்றி உங்களின் கருத்து?

இந்து பத்திரிகையில் ராம் அவர்கள் தெளிவாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ரபேல் விவகாரத்தில் அந்த பூனைக்குட்டி இப்பொழுது தெளிவாக வெளியில் வந்துள்ளது. அதைத்தான் இந்து ராம் தன்னுடைய கட்டுரையில் முதல் பக்கத்திலேயே தெளிவாகச் சொல்லியிருக்கின்றார். இந்திய பேச்சுவார்த்தை குழுவிற்கு பதிலாக பிரதமர் அலுவலகமே பிரான்ஸ் அரசோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.

பிரதமர் அலுவலகமே, போர் விமானத்தை நேரடியாக வாங்கியது அவருடைய கட்டுரையின் மூலமாக இன்றைக்கு தெளிவாக அம்பலமாகி இருக்கின்றது. ரபேல் வழக்கு என்பது உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. எனவே, அங்கு அளித்திருக்கக்கூடிய ரிப்போர்ட்டில் மூடப்பட்ட சீல் வைக்கப்பட்ட ஒரு கவரை கொடுத்திருக்கின்றார்கள்.

அந்தக் கவரில் பிரதமர் அலுவலகம் பேச்சுவார்த்தை நடத்திய விவரங்கள் அதில் இடம்பெறவில்லை என்பது ஒரு முக்கியமான ஒன்று. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், சுதந்திர இந்தியாவில் இப்படிப்பட்ட ஒரு பெரும் ஊழல் குற்றச்சாட்டில் இதுவரை எவரும் சிக்கவில்லை. ஆனால், மோடி அவர்கள் இப்பொழுது சிக்கியிருக்கின்றார்.

ஆகவே, பிரதமர் அலுவலகம் மூலமாக இந்த பேச்சுவார்த்தை நடந்திருக்கின்றது. பிரதமர் அலுவலகத்திலிருந்து முறையாக தகவல் தராத காரணத்தினால் உச்ச நீதிமன்றத்தினுடைய கண்டிப்புக்கும், அதேநேரத்தில் நீதிமன்ற அவமதிப்புக்கும் பிரதமர் ஆளாகியிருக்கின்றார் என்பது, இந்தக் கட்டுரையினுடைய வெளிப்பாடு. அதற்கு இதுவே ஆதாரம்.

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x