Published : 14 Feb 2019 12:03 PM
Last Updated : 14 Feb 2019 12:03 PM

கல்விச்செலவுக்காக தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த கல்லூரி மாணவர்: அடித்து உடைத்து சேதப்படுத்திய காவலர்கள்

தனது வறுமையான சூழ்நிலையிலும் கல்விப் பயில மாலை நேரத்தில் தள்ளு வண்டியில் சாப்பாட்டுக்கடை நடத்திவந்த மாணவரின் வண்டியை போலீஸார் அடித்து உடைத்துள்ளனர். இதுகுறித்து உதவி கேட்டு மாணவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, போதைப்பழக்கத்தால் இளம்பருவத்தினரின் ஒரு பகுதியினர் வாழ்வை சீரழித்துக்கொண்டிருப்பதை தடுக்க காவல்துறையும் சமூக அக்கறை உள்ளவர்களும்போராடி வருகின்றனர்.

மறுபுறம் படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல் கிடைத்தவேலையை செய்யும் நிலையில் உள்ளனர். ஸ்விக்கி, உபேர், சொமெட்டோ போன்ற உணவு கொண்டுச்செல்லும் பணியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சொந்த மோட்டார் சைக்கிளில் இரவு பகல் பாராமல் உழைக்கின்றனர்.

கல்வி ஒன்றே உயர்வுக்கு வழி என நினைக்கும் இளம் பருவத்தினர் அதை கற்க வசதி இல்லாவிட்டாலும் போராடி படிக்கின்றனர். கல்வி பயிலும் நேரத்தைத்தவிர மற்ற நேரத்தில் பார்ட் டைம் வேலை பார்த்து பிழைக்கின்றனர்.

இவ்வாறு பயிலும் ஒரு கல்லூரி மாணவரை போலீஸார் அவரது கல்விப்பயிலும் பணியை முடக்கும் விதத்தில் நடந்துக்கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் காவல் ஆணையரிடம் உதவி கேட்டுள்ளார்.

சென்னை பெரியமேட்டில் வசிப்பவர் அப்துர்ரஹ்மான் (22). சென்னை புதுக்கல்லூரியில்  மாலைநேர கல்லூரியில் உருது பிரிவில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். வறுமையான சூழ்நிலையில் உள்ள அப்துர்ரஹ்மான் கல்விச்செலவுக்காக இரவு நேரத்தில் அருகே உள்ள சாமித்தெருவில் தள்ளுவண்டியில் பிரியாணி, சிக்கன் பகோடா போன்றவற்றை விற்பனைசெய்து அந்த வருமானத்தில் கல்விச்செலவை பார்த்து வருகிறார்.

சமூக அக்கறையுள்ள அப்துர் ரஹ்மான் சென்னை மாநகராட்சியில் சமூக சேவை பணியிலும், அப்போலோ மருத்துவமனையின் விபத்து பிரிவில் முதல் உதவியாளராக சேவை செய்து வருகிறார். இவரது சேவைப் பணிக்காக சென்னை மாநகராட்சி ஆணையர் பாராட்டி சான்றிதழ் அளித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 8-ம் தேதி வழக்கம்போல் தனது வியாபாரத்தை முடித்துக்கொண்டு சாலையோரம் தனது தள்ளுவண்டியை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார் அப்துர்ரஹ்மான். மறுநாள் காலை 7 மணி அளவில் அவரது தள்ளுவண்டி உடைக்கப்பட்டு கிடப்பதாக தகவல் கிடைத்து அங்குச்சென்று பார்த்துள்ளார்.

தள்ளுவண்டி உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு, உடைக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்துர்ரஹ்மான் அருகிலிருந்தவர்களிடம் இது குறித்து கேட்டபோது யாருக்கும் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

தனது கல்விக்காக இருந்த ஒரே வருமானமும் போனதே என வருந்திய அவர் பக்கத்தில் உள்ள கடையின் கண்காணிப்பு கேமராவின் உதவியுடன் தள்ளுவண்டியை உடைத்தது யார் என சோதனையிட்டபோது அது போலீஸார் என தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்தார்.

டாடா சுமோவில் வரும் போலீஸார் நான்கைந்துபேர் அவரது தள்ளுவண்டியை அடித்து உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. நான்கைந்து போலீஸார் ஒன்றுசேர்ந்து வண்டியை உடைத்து தள்ளும் காட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து ஆன்லைனில் புகார் அளித்துள்ளார். ஆனால் நான்கு நாட்கள் ஆகியும் நடவடிக்கை இல்லாததால் நேற்று காவல் ஆணையர் அலுவலகம் வந்து நேரில் புகார் அளித்து சிசிடிவி பதிவையும் அளித்தார்.

காவல் ஆணையரிடம் தனக்கு உதவி செய்யும்படி வேண்டுகோளும் வைத்துள்ளார். இளம்பருவத்தினர் வேலை வாய்ப்பு, மாணவர்கள் கல்விக்காக தொடர்ந்து உதவி வரும் காவல் ஆணையர் தனக்கும் உதவுவார் என பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் தெரிவித்தார்.   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x