Last Updated : 25 Feb, 2019 07:06 AM

 

Published : 25 Feb 2019 07:06 AM
Last Updated : 25 Feb 2019 07:06 AM

கூட்டணி, தொகுதி, கொள்கையில் மட்டுமல்ல.. சின்னத்திலும் மாற்றம் கண்ட பாமக- மாயாவதி கட்சி தந்த மாம்பழம்

சென்னையில் 1989-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ராமதாஸால் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி (பாமக), அந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலை தனித்து சந்தித்தது. 36 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இதையடுத்து, ராஜீவ்காந்தி படுகொலைக்கு பின்னர் 1991-ம் ஆண்டு நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிட்டது. பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் பாமக சார்பில் போட்டியிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.

தனித்து தேர்தல்களை சந்தித்து வந்த பாமக,  1996 மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக வாழப்பாடி ராமமூர்த்தியின்  திவாரி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது. 20 மக்களவை தொகுதிகள் மற்றும் 104 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட பாமக ஆண்டிமடம், பென்னாகரம், எடப்பாடி, தாரமங்கலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. 1998-ம் ஆண்டு மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றது. அதுவரை யானை சின்னத்தில் போட்டியிட்டு வந்த பாமக, இந்த தேர்தலில் 5 தொகுதியில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டது.

இதில் வந்தவாசி, தருமபுரி, வேலூர், சிதம்பரம் ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாமக, மயிலாடுதுறை தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தது. 1999-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்த பாமக 8 இடங்களில் போட்டியிட்டது. இதில், தருமபுரி, சிதம்பரம், வந்தவாசி, அரக்கோணம், செங்கல்பட்டு ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதையடுத்து நடந்த 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, 20 தொகுதிகளில் வென்றது. 2004 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 30 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 18 தொகுதிகளில் வெற்றி கண்டது.

2009 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக அனைத்திலும் தோல்வியை தழுவியது. இதையடுத்து 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 30 தொகுதிகளில் பாமக போட்டியிட்டது. ஆனால், ஜெயங்கொண்டம், செஞ்சி, அணைக்கட்டு ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

பாமக தொடங்கியதும் சில தேர்தல்களை மட்டும் தனித்து சந்தித்து வந்த நிலையில், பின்னர் அதிமுக மற்றும் திமுக என மாறி மாறி கூட்டணி வைத்து தேர்தல்களில் போட்டியிட்டது. 2011 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளுடனும் மற்றும் தேசிய கட்சிகளுடனும் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்பதை ராமதாஸும், அன்புமணியும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

ஆனால்  2014-ம் ஆண்டு வந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது. அந்த தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக சார்பில்  தருமபுரியில் போட்டியிட்ட அன்புமணி மட்டும் வெற்றி பெற்றார்.

ராமதாஸ், அன்புமணியின் சபதம்

மீண்டும் அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகளுடன் இனி எந்த காலத்திலும் பாமக கூட்டணி வைக்காது என்று ராமதாஸும், அன்புமணியும் சபதம் செய்தனர். ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி ’ என்ற முழக்கத்தோடு 2016 சட்டப்பேரவைத் தேர்தலை பாமக தனித்து சந்தித்தது. ஆனால், போட்டியிட்ட 232 தொகுதிகளிலும் பாமக படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் என்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொல்லி வந்த ராமதாஸும், அன்புமணியும் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாம்பழம் சின்னம்

பாமக மூத்த நிர்வாகிகளிடம் கேட்ட போது, “பாமக முதலில் யானை சின்னத்தில் போட்டியிட்டது. எல்லா மாநிலத்திலும் யானை சின்னம் இருந்தது. உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், தமிழகத்தில் பாமகவும் யானை சின்னத்தை பயன்படுத்தி வந்தன. பின்னர் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய கட்சி அங்கீகாரம் பெற்றது. இதனால், யானை சின்னம் பகுஜன்

சமாஜ் கட்சிக்கு மட்டும் ஒதுக்கப்பட்டது. மற்ற மாநிலங்களில் யாரெல்லாம் யானை சின்னம் பயன்படுத்தி வந்தார்களோ, அவர்களுக்கு மாற்று சின்னம் வழங்கப்பட்டது. அப்படிதான் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் கிடைத்தது.

5.3 சதவீத வாக்கு

பாமக முதலில் தேர்தலை சந்தித்தபோது வாக்கு சதவீதம் 5.8 ஆக இருந்தது. பின்னர் அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கு சதவீதத்தில்  ஏற்ற இறக்கம் நிலவியது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியின் வாக்கு சதவீதம் 5.3 ஆக உள்ளது. ஆனால், முதல் தேர்தலில் பாமகவுக்கு 13 லட்சம் பேர் வாக்களித்திருந்தனர். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 25 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். கட்சியின் வாக்கு சதவீதத்தில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால், பாமகவுக்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x