

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதற்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலை அடுத்து, இந்திய மிராஜ் வகைப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன. இதில் பாலாகோட், சக்கோத்தி மற்றும் முஸாஃபராபாத்தில் இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், "உலகத்தை அச்சுறுத்தும் தீவிரவாதத்தை எதிர்த்து, அதை வேரோடு அழிப்பதற்கு எடுத்திடும் நடவடிக்கைகளில் வெற்றிகள் பல கண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியின் துணிச்சல் மிக்க செயல்பாட்டின் காரணமாக, இன்றைய தினம் வெற்றிகரமான விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டு, பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதற்கு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாக எனது மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.