

பிரதமர் மோடியின் பலமான தலைமையில் நாடு பாதுகாப்பாக இருக்கிறது என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலை அடுத்து, இந்திய மிராஜ் வகைப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன. இதில் பாலாகோட், சக்கோத்தி மற்றும் முஸாஃபராபாத்தில் இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பாகிஸ்தானில் பாலாகோட் பகுதியில் செயலாற்றி வந்த தீவிரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்த இந்திய விமானப்படையின் வீரத்திற்கு தலை வணங்குவோம்.
தீவிரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. இதனை சாதித்த இந்திய வீரர்களுக்குப் பாராட்டுகள். இந்தியப் படையின் வீரத்திற்கு தலைவணங்குவோம். இந்தியா எந்த நிலையிலும் தீவிரவாதத்தைப் பொறுத்துக்கொள்ளாது என்பதை நிரூபித்திருக்கிறது.
இந்த நடவடிக்கை நாடு பிரதமர் மோடியின் பலமான தலைமையில் பாதுகாப்பாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது" என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.