

சின்னதம்பி யானையை வனத்திற்கு அனுப்புவதா? முகாமிற்கு அனுப்புவதா? என்பதை அரசு முடிவு செய்துகொள்ள வேண்டும். சின்னதம்பிக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித ஆபத்தும் இல்லாமல் அது நடக்கவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் நேற்று சின்னதம்பி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சின்னதம்பி யானையை காட்டிற்குள் அனுப்ப வேண்டும், கும்கியாக மாற்றக்கூடாது, செங்கல் சூளைகளை மூட வேண்டும் என்ற அருண் பிரசன்னா, முரளிதரன் வழக்குகள் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது, கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் சஞ்சய் குமார் ஸ்ரீவத்சவா ஆஜராகியிருந்தார். மேலும் நேற்று ஆஜாராவார் என சொல்லப்பட்ட யானை ஆராய்ச்சி நிபுணர் அஜய் தேசாய் ஆஜராகவில்லை.
சின்னதம்பியை நிரந்தரமாக முகாமில் வைப்பதா அல்லது காட்டிற்குள் அனுப்புவதா என்பது குறித்து யானையைக் கண்காணித்து தலைமை வனப்பாதுகாவலர் முடிவெடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சின்னதம்பி யானையால் கிராம விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், பொது மக்களின் பாதுகாப்பு குறித்தும் அரசு அக்கறை செலுத்த வேண்டிய கடமை உள்ளது என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார். சின்னதம்பி விளைபயிர்களை உண்டு பழகி விட்டதால், மீண்டும் காட்டிற்குக் கொண்டு செல்வது அவசியமற்றது எனவும் தெரிவிக்கப்பட்டது.
முகாமில் சின்னதம்பி யானை சிறப்பாக பராமரிக்கப்படும் என கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் ஸ்ரீவத்சவா உறுதியளித்தார். ஓரிரு மாதங்களில் முகாமில் உள்ள மற்ற யானைகளுடன் பழக சின்னதம்பிக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். சின்னதம்பி யானையை வனத்துறை பிடித்து முகாமில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளிதது.
பிடிக்கும் போது சின்னதம்பியை எந்த வகையிலும் துன்புறுத்தவோ காயம் ஏற்படுத்தவோ கூடாது எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். சின்னதம்பி மட்டுமல்லாமல், ஒரு மனித உயிர் கூட பலியாகக் கூடாது எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
நீதிமன்ற உத்தரவு நகலுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்றும், உடனடியாக சின்னதம்பியை பிடித்து முகாமுக்கு கொண்டு செல்லலாம் என்றும், பொதுமக்கள், பயிர்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தனர். வழக்குகளின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து சின்னதம்பிக்கு மயக்க ஊசி போட்டுப் பிடிக்கும் முயற்சியில் வன அலுவலர்கள் இன்று பணியைத் தொடங்கியுள்ளனர். இதற்கான வன மருத்துவர்களும், இரண்டு கும்கி யானைகளும், பொக்லைன் எந்திரங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.
சின்னதம்பி இரவு கரும்புக்காட்டுக்குள் சென்றுவிட்டு பகலில் வெளியே வருகிறது. அதைப் பிடிப்பதற்கு அதன் உடல் நலம், மன நலம் சோதிக்கப்பட வேண்டும். அதற்கான பணியில் வன அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்தமுறை சின்னதம்பி காட்டுக்குள் போக கும்கி யானைகள் உதவியுடன் முயற்சி செய்யப்பட்டபோது அது முரண்டு பிடித்ததால் அதன் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது.
பொக்லைன் எந்திரத்தை கடுமையாகப் பயன்படுத்தியதால் சின்னதம்பிக்கு காயம் ஏற்பட்டது. இம்முறை இதைக் கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் அனைவர் மனதிலும் இடம்பிடித்துவிட்ட சின்னதம்பி இன்று பிடிக்கப்பட்டு முகாமுக்கு கொண்டுச் செல்லப்படும் என வனத்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.