

பணியின்போது செல்போன் பயன்படுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ள தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்து, இதை வரும்காலங்களில் கடுமையாக கடைபிடிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்குகளை விசாரிக்கத் தொடங்கிய போது, தாம் உயர் நீதிமன்றத்திற்கு வரும் வழியில் போக்குவரத்து சிக்னல்களில், போக்குவரத்துக் காவலர்கள், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாமல், மொபைல் போன்களைப் பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிவித்தார்.
பச்சை சிக்னல் எரிந்து வாகனங்கள் புறப்பட்ட போது, சாலை குறுக்கே ஒரு பெண்மணி ஓடிய போதும், அதை போக்குவரத்துக் காவலர்கள் கண்டுகொள்ளாமல், செல்போன்களைப் பார்த்துக் கொண்டிருந்ததாக அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.
போக்குவரத்துக் காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தாம் இதைக் கூறவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, பொதுமக்களின் உயிர், பாதுகாப்பு முக்கியம் எனவும், சென்னை நகரம் முழுவதும் போக்குவரத்து காவலர்கள் சரியாகப் பணியாற்றுவதில்லை எனவும், செல்போன்களில் பேசுவது, வாட்ஸ்அப் பார்ப்பது என்று இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.
இந்த விஷயத்தை டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி, அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதி, இது சம்பந்தமாக அவர்கள் எடுத்த நடவடிக்கை குறித்து ஜனவரி 31-ம் தேதி தெரிவிக்கும்படி, உத்தரவிட்டார்.
இதையடுத்து மறுநாளே டிஜிபி சார்பில் ஒரு சுற்றறிக்கை அனைத்து காவல் ஆணையர்கள், எஸ்.பி.க்களுக்கு அனுப்பப்பட்டது. அதில் பணியின்போது செல்போன் பயன்படுத்துவது குறித்த தனது உத்தரவை கடுமையாகப் பின்பற்ற உத்தரவிட்டிருந்தார். நீதிமன்றத்தில் அரசு அறிக்கை அளிக்க வேண்டிய நிலையில் பணியின்போது செல்போனில் பேசும் காவலர்களைப் பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று டிஜிபி, காவல ஆணையர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழக டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
டிஜிபி மற்றும் காவல் ஆணையர் சுற்றறிக்கையில், பணி நேரங்களில் இருக்கும் காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் செல்போன் பயன்படுத்தக் கூடாது, மீறி பயன்படுத்துவோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தனித்தனியாக சுற்றறிக்கை பிறப்பித்து உத்தரவிட்டது குறித்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.
பணியின்போது செல்போனை பயன்படுத்தியது தொடர்பாக 33 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் அறிக்கை அளிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்றிய டிஜிபி மற்றும் சென்னை மாநகர ஆணையருக்கு பாராட்டுகளை தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சுற்றிக்கையை பதிவு செய்து கொண்டார்.
இனி வரும் காலங்களில் பணியின்போது செல்போன் பயன்படுத்தும் காவல்துறையினர், போக்குவரத்து காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.