

மத்திய பட்ஜெட்டில் எஸ்.சி., எஸ்.டி. துறைக்கு 30 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் எல்.முருகன் உதகையில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பட்டியல் இன மக்களுக்கு செய்யபட்டுள்ள அடிப்படை வசதிகள், மேம்பாட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. பட்டியல் இன மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி தொழில் செய்யும் விதமாக மத்திய அரசு சார்பில் ரூ.490 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு எஸ்சி/எஸ்டி துறைக்கு கூடுதல் 30 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு பென்சன் ரூ.6,000 அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டதில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
தேசிய அளவில் பட்டியலின பிரிவினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறைந்துள்ளன. நான் பொறுப்பேற்ற பின்னர் கேரளா, கர்நாடக மாநிலத்தில் வன்கொடுமைகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிலுவையிலிருந்த வழக்குகளும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
பட்டியலின மக்களுக்கு கடன் உதவி வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளன.
தமிழகத்திலேயே நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் தீண்டாமை என்பது கிடையாது. அதிகம் படித்தவர்கள் இருப்பதே அதற்கு காரணம். குறிப்பாக இந்த இரண்டு மாவட்டங்களில் பட்டியல் இன மக்கள் மீதான வன்கொடுமைகள் மற்ற மாவட்டங்களை விட குறைவாக உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக ஹெச்.பி.எஃப்-ல் ஐடி நிறுவனங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.