

பெரியமேட்டில் டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு ரூ.2 லட்சம் பணத்தை திருடி சென்று விட்டனர்.
சென்னை மாநகராட்சி கட்டிடத் தின் பின்புறம் பெரியமேட்டில் ஒரு அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இதன் மேற்பார்வையாளராக இருப்பவர் ராவணன். இந்த கடையை ஒட்டியே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகின்றன. நேற்று காலையில் கடையை திறக்க ஊழியர் ஒருவர் வந்த போது, கடைக்குள் மது பாட்டில் கள் சிதறிக் கிடந்தன. பணம் வைக்கப்பட்டிருக்கும் மேஜையும் உடைக்கப்பட்டிருந்தது. உடனடி யாக அவர் மேற்பார்வையாளர் ராவணனுக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து பார்த்து, முந்தைய நாள் வசூல் பணம் ரூ.2 லட்சத்தை மேஜை டிராயரில் வைத்திருந்ததாகவும், அது திருடப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
ஷட்டர் பூட்டை உடைக்காமல் எப்படி கடைக்குள் நுழைய முடியும் என்று சுற்றிப் பார்த்தபோது கடையின் பின்பக்க சுவரில் துளை போடப்பட்டிருப்பதை பார்த்தனர். நள்ளிரவில் வந்த திருடர்கள் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்து திருடியிருப்பது தெரிந்தது. பணத்தையும் திருடி விட்டு சில மதுபாட்டில்களை உடைத்து கடைக்குள் வைத்தே குடித்துள்ளனர். மதுபான பாட்டில்கள் கொண்ட 3 பெட்டி களையும் திருடி சென்றுள்ளனர்.
பெரியமேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். டாஸ்மாக் கடையில் துளை போடப்பட்ட சுவற்றின் அருகிலேயேதான் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. எனவே மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்கள் யாராவது இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.