Last Updated : 19 Feb, 2019 10:15 AM

 

Published : 19 Feb 2019 10:15 AM
Last Updated : 19 Feb 2019 10:15 AM

பாமகவுக்கு இடமில்லை; திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி முடிவு செய்வதில் இழுபறி

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம்பெறாது என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், திமுக, காங்கிரஸ் இடையே தொகுதிகளை இறுதி செய்வதில் முடிவு எட்டப்படாமல் இழுபறி நிலை நீடிக்கிறது.

மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இம்மாத இறுதியில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கூட்டணி அமைக்க ஒவ்வொரு கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்து இன்று வரும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, அதிமுகவுடன் கூட்டணி குறித்த முறைப்படியான அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிகிறது. இதனால், வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக  இணைந்து தேர்தலைச் சந்திக்கப்போவது உறுதியாகி இருக்கிறது. இந்தக் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறப் போகின்றன என்பது அடுத்துவரும் நாட்களில் தெரியவரும்.

இதற்கிடையே, வரும் மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சி கூட்டணியில் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சு டெல்லியில் நடந்து வருகிறது.

இதுகுறித்து திமுக வட்டாரங்கள் தரப்பில் கூறுகையில், "வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணியுடன் பாமக பேச்சு நடத்தி வருவதால், திமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை" என்று தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் பாமக இடம் பெறாது என்ற தகவல்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மிகப்பெரிய நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக எம்.பி. கனிமொழி, தங்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், முகுல் வாஸ்னிக் ஆகியோரிடம் தெளிவாக தெரிவித்துவிட்டார்.

ஆனால், காங்கிரஸ் கட்சியோ வரும் மக்களவைத் தேர்தலில் 11 இடங்களை திமுக தலைமையிடம் கோருகிறது. அதில் 10 தொகுதிகள் தமிழகத்திலும், புதுச்சேரியையும் காங்கிரஸ் கேட்கிறது. ஆனால், திமுக தலைமைக்கு காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்களுக்கு மேல் வழங்க விருப்பமில்லை .

ஒருவேளை காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் போட்டியிட விரும்பினால்கூட, தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரி ஒரு இடம் என 10 தொகுதிகள் வரை கிடைக்கலாம். ஆனால், திமுகவைப் பொறுத்தவரை தமிழகத்தில் 25 தொகுதிகளுக்கு குறைவில்லாமல் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறது. மீதமுள்ள 15 தொகுதிகளைத்தான் மற்ற கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கும் எனத் தெரிகிறது.

அதேசமயம், திமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றால் தங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களின் அளவு குறையும் என்று காங்கிரஸ் கட்சி கருதிய நிலையில், அதிமுக,பாஜக கூட்டணிக்கு பாமக செல்ல இருக்கும் தகவல் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவுக்கு நிம்மதி அளிக்கும். இதனால், 11 இடங்கள்வரை திமுக தலைமையிடம் கேட்டுப் பெறலாம் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் நம்புகின்றன.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட பல தலைவர்கள் தொகுதி குறித்து முடிவு செய்ய டெல்லியில் முகாமிட்டுள்ளனர். தங்களுக்கு வழக்கத்தைக் காட்டிலும் அதிகமான இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "எந்த குறிப்பிட்ட தலைவரையும் மனதில் வைத்து தொகுதிகளைக் கேட்கவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனியாகப் போட்டியிட்டபோது, எந்தெந்த தொகுதியில் அதிகமான இடங்களைப் பெற்றோம் என்பதை வைத்து அந்த முன்னுரிமை அடிப்படையில் இடங்களைக் கோருகிறோம்" எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன்முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு கட்சி ஆகியவை இடம் பெறலாம் எனத் தெரிகிறது.

தொகுதிப் பங்கீடு நிலவரம் குறித்து திமுக எம்.பி. கனிமொழியிடம் கேட்டபோது, அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். அனேகமாக அடுத்த சில நாட்களில் திமுக காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் முடிவாகும் எனத் தெரிகிறது.

திமுகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களைக் கேட்டுள்ளன. இந்த ஒரு மாநிலத்தில்தான் நாங்கள் போட்டியிட முடியும். ஆதலால் போட்டியிடும் இடங்களில் சமரசம் செய்து கொள்ள முடியாது. ஆதலால், மற்ற கட்சிகளுக்கும் நியாயமான அளவில் இடங்கள் கிடைக்க வழி செய்யுமாறு காங்கிரஸ் கட்சியிடம் கேட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

தமிழில்: போத்திராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x